முஸ்லிம்கள் குர்பான் கடமையின்போது நாட்டின் சட்ட விதிகளைப் பேணுவதுடன் ஏனைய இன மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் கூட்டுக்குர்பானை வரவேற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பு பிரதேச மக்களின் நலன்கருதி 12 மஸ்ஜிதுகளின் சம்மேளனம் ஒன்றிணைந்து கூட்டுக்குர்பானுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திட்டம் சமூகத்தில் ஒற்றுமையைப் பலப்படுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கொழும்பு மஸ்ஜிதுகள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டுக் குர்பான் திட்டத்தின் கீழ் 309 மாடுகள் அறுக்கப்பட்டன. 1844 பங்குகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதேவேளை கூட்டுக்குர்பானில் மக்கள் அதிக அக்கறை செலுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்புப் பகுதியில் மஸ்ஜிதுகள் சம்மேளனம் அறிமுகப்படுத்தியுள்ள கூட்டுக்குர்பானுக்கு கடந்த வெள்ளிக்கிழமைவரை 66 மாடுகளுக்கே மக்கள் பங்களிப்புச் செய்துள்ளார்கள். இது 461 பங்குகளாகும்.
இவ்வருடம் கொழும்பு பகுதியிலுள்ளவர்கள் பலர் திருகோணமலை, கந்தளாய், மன்னார் போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு குர்பான் கடமையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளமை இதற்கான காரணமாகும்.