பழங்களில் எந்தளவு இரசாயனங்கள் கலந்துள்ளது..?

fruit-causes-weight-gainஇன்று நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கள் மற்றும் பழங்களில் பல இராசயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. நாம் இன்றைக்கு உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் எந்த அளவு பாதகம் விளைவிப்பதாக உள்ளன என்பதை கீழே பார்க்கலாம்.

“திராட்சைக் கொத்துகள் ரசாயன உரங்களில் முக்கி எடுக்கப்படுவதால் தான் திராட்சை மீது வெள்ளைப் படிமம் இருக்கிறது. இது உடல்நலத்துக்கு கேடானது. திராட்சை மட்டுமல்ல… இன்றைய சூழலில் நாம் சாப்பிடுகிற அத்தனை உணவுப் பொருட்களுமே விஷம்தான்’’. 

வாழை :

ஏழைகளின் நண்பன் என்று சொல்லும வாழைப்பழங்களை விரும்பிச் சாப்பிடுகிறோம். எத்திலின் வாயுதான் வாழையை இயல்பாகப் பழுக்க வைக்கிறது. அடைக்கப்பட்ட ஒரு அறைக்குள் வாழைப் பழங்களை வைத்து, அதனுள் எத்திலினை செயற்கையாகத் திணிக்கிறார்கள். எத்திலின் வாயு அங்குள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து வாழையைப் பழுக்க வைப்பதோடு, நல்ல மஞ்சள் நிறத்தோடு பளபளப்பாக்கித் தருகிறது.

இதற்கு முன் வேறொரு யுக்தி கையாளப்பட்டது.  வாழைத்தார்கள் நிரம்பிய அறையினுள் ஊதுபத்தியைப் பற்ற வைத்து விட்டு காற்று உட்புகாதபடி அடைத்து விடுவர். அதனால் உள்ளிருக்கும் ஆக்சிஜன் வாயு, கார்பன் டை ஆக்ஸைடாக மாறிவிடும். கார்பன் டை ஆக்ஸைடுக்கு ஒரு பழத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை இருப்பதால், வாழை பழுத்துவிடும். பழ விற்பனை வணிகமயமாக்கப்பட்ட இக்காலச்சூழலில், ‘சீக்கிரம் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும்’ என்கிற எண்ணத்தில் இது போன்ற நாசக்கேடுகளை செய்கிறார்கள்.

மாம்பழம் :

மாம்பழம் வெளியே பார்ப்பதற்கு நல்ல மஞ்சள் நிறத்தில் பளபளப்புடனும், வெட்டிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாகவும் புளிப்பாகவும் இருப்பதற்கு கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதன் விளைவுதான் காரணம். இயற்கையாக மாம்பழத்தில் முதிர்ச்சியடையும்போது எத்திலின் வாயு உற்பத்தியாகி அதனை பழுக்க வைக்கும். பிஞ்சிலேயே பழுக்க வைக்க வேண்டும் என்றால் அசட்டலின் வாயு தேவைப்படுகிறது.

அசட்டலின் வாயுவை வெளியிடும் தன்மை கார்பைட் கல்லுக்கு உண்டு. அடைக்கப்பட்ட அறையினுள் மாம்பழக் கூடைகளை வைத்து, அதனுள் சிறிதளவு கார்பைட் கல்லை பொட்டலமாக்கி வைத்து விடுவர். கார்பைட் கற்களி லிருந்து வெளிப்படும் அசட்டலின் வாயு மாம்பழத்தை பழுக்க வைக்கிறது. அசட்டலினும் எத்திலின் குடும்பத்தைச் சேர்ந்த வாயுதான். இப்படிச் செயற்கையாக பழுக்க வைப்பதனால் அதை உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அதனால், உலக நாடுகள் பலவும் இம்முறைக்கு தடை விதித்துள்ளன. 

மாதுளை :

குறைந்தபட்சம் 20 முறையாவது பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட பிறகுதான் மாதுளை பறிக்கப்படுகிறது. மாதுளைகளின் நல்ல அடர் சிவப்பு நிறத்துக்கும் கவர்ச்சியாக தெரிவதற்கெனவும் பியூரிடான் போன்ற அதி விளைவை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்களைத் தெளித்தே பேக்கிங் செய்கின்றனர்.

ஆப்பிள் :

சத்து நிறைந்த பழம் என்று அதிக அளவில் பரிந்துரைக்கப்படும் ஆப்பிள் குளிர்பிரதேசங்களில் விளையக்கூடியது. பழம் அழுகுவது என்பது இயற்கை எய்துதல். எல்லா பழங்களுக்கும் குறிப்பிட்ட வாழ்நாள் உண்டு. குளிர்பிரதேசங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நமது சந்தைகளுக்கு வந்து விற்கப்படும் ஆப்பிள் பறிக்கப்பட்ட நாளிலிருந்து பல நாட்களானாலும் அழுகாமல் இருக்கிறதே…
எப்படி?

குளிர்பிரதேசத்திலிருந்து வெப்பமண்டலப் பகுதிக்கு வரும்போது, அந்த தட்பவெப்ப நிலையை சமாளிப்பதற்காகவும் குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் இருப்பதற்காகவும் ஆப்பிள் மீது மெழுகு பூசப்படுகிறது. அந்த மெழுகு தரும் பளபளப்பைக் கண்டுதான், நாம் நல்ல பழம் என்று வாங்கி உண்கிறோம். அந்த மெழுகு உள்ளே செல்லும்போது வயிற்றுக்குள் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

தர்பூசணி :

தர்பூசணியின் இயல்பான அளவும், அதன் இளம் பச்சை நிறமும் நமக்குத் தெரிந்ததுதான். இன்றைக்கு கடையில் விற்கும் தர்பூசணிகளோ, கரும்பச்சை நிறத்தில் பூசணிக்காய் அளவில்தான் இருக்கின்றன. அதை வாங்கிச் சாப்பிடும் நமக்கு தர்பூசணிக்கான சுவையும் கிடைப்பதில்லை. ஏனெனில், அவை வீரிய ஒட்டுரக தர்பூசணிகள். ஒரு ரகப் பயிரின் மகரந்தத்தூளை இன்னொரு ரகத்துடன் இணைத்து மகரந்தச் சேர்க்கை நடக்க வைப்பதன் மூலம் புதிதாக ஒரு ரகம் கிடைக்கும்.

அதுவே ஒட்டு ரகம். இது இயற்கையாகவே நடக்கும் நிகழ்வு என்றாலும், லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற இரண்டு ரகங்களை தேர்ந்தெடுத்து அவற்றுள் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தி விளைவிப்பதே வீரிய ஒட்டுரகம். இயற்கை சுழற்சிப்படி ஒவ்வொரு பருவத்துக்கும் அதன் தட்பவெப்பத்தை சமன் செய்யும் விதத்திலான பழங்கள்தான் விளையும்.  கோடை காலத்தில் மட்டும் விளையக்கூடிய சீசன் பழமான தர்பூசணி இன்று எல்லா பருவங்களிலும் விளைவித்து விற்கப்படுகிறது.

பப்பாளி :

பழங்களிலேயே தர்பூசணி மற்றும் பப்பாளி பழங்கள்தான் அதிக அளவில் ரசாயனத் தெளிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. இப்போது புழக்கத்தில் இருக்கும் ரெட் லேடி ரக பப்பாளி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டு ரகமாகும். தைவான் தட்பவெப்ப சூழலுக்கான ரகம், நம் மண்ணில் விளைவிக்க வேண்டுமானால் ரசாயனத்தை அள்ளித் தெளிப்பதைத் தவிர்த்து வேறு வழி கிடையாது.