அல்லாஹ் பல்வேறு காலகட்டங்களில் அந்தந்த காலத்தின் சமுதாயத்தினருக்கேற்ப அவனது தூதர்களை அனுப்பினான். அத்தூதர்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றான். இறைத்தூதர் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான், சிலருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கி உயர்த்தி இருக்கின்றான். மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களுக்கு மிகத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தான். ‘ரூஹுல் குதுஸி’ எனும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பல அதிசயங்களை மக்கள் முன் நிகழ்த்த செய்தான்.
ஆனால் பனி இஸ்ராயீலர்களில் ஒரு பிரிவினர் ஈஸா (அலை) செய்வதெல்லாம் சூனியமும் மாய மந்திரமும்தான் என்று கூறி நிராகரித்தனர். அவர்களை இறைத்தூதராக ஏற்கவில்லை. இருப்பினும் ஈஸா (அலை) நம்பிக்கை இழக்காமல் இறைக் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துக்கூறிக் கொண்டே இருந்தார்கள்.
மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அல்லாஹ்வின் வார்த்தைகளான ‘தவ்ராத்தை’ மிக நுணுக்கமாக ஈஸா (அலை) மக்களுக்கு விளக்கியதோடு, தனக்கு வழங்கப்பட்டிருந்த இன்ஜீல் வேதம், அதனை மெய்ப்படுத்துகிறது என்பதையும் விவரித்தார்கள்.
ஈஸா (அலை) அவர்களை நம்பிய ஒரு பிரிவினரின் இதயங்களில் இறைவன் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினான். ஆனால் அவர்கள் இறைக்கட்டளையில்லாமல் அவர்களாக துறவித்தனத்தை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகப் புதிதாகத் தாமாகவே உண்டாக்கிக் கொண்டார்களே தவிர அல்லாஹ் அவர்கள் மீது அதனை விதியாக்கவில்லை.
துறவித்தனத்தை அவர்கள் சரிவரப் பேணவில்லையென்றும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர் என்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லாஹ்வையும் அவனது தூதர் ஈஸா (அலை) அவர்களையும் நம்பியவர்களையும்கூட நிராகரிப்பாளர்கள் வழிகெடுத்தனர். வட்டி வாங்குவதை இறைவன் விரும்புவதில்லை, அதை அல்லாஹ் தடை செய்துள்ளான் என்று ஈஸா (அலை) எடுத்துரைத்தும் இறை நிராகரிப்பாளர்கள் வட்டி வாங்கி அப்பாவி மக்களின் சொத்துக்களை விழுங்கிக் கொண்டிருந்தனர்.
ஈஸா (அலை), மக்களிடம் தொழுகையை நிலைநாட்ட வலியுறுத்தியும், ஸகாத் என்ற தர்மத்தைச் செய்ய வேண்டுமென்று போதித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தங்களின் சொத்துகளை அழிக்கச் சொல்லப்படும் திட்டமாக அப்போதனைகளைக் கருதி, நம்பிக்கை கொண்ட அநேகரையும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் தடுத்தனர்.
ஈஸா (அலை) தன் மக்களிடம் “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னால் வந்த நபி மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த வேதம் ‘தவ்ராத்தை’ மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதர் வரவிருக்கும் நற்செய்தியைக் கூறவும் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாது. வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை” என்று வலியுறுத்தினார்கள்.
அல்லாஹ் நாடியிருந்தால், ஈஸா (அலை) பனீ இஸ்ராயீலர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த பின்னர் அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களும் இருந்தனர், நிராகரிப்போரும் இருந்தனர்.
அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். நன்மை செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகின்றான்.
திருக்குர்ஆன் 2:253, 4:160-161, 5:46, 57:27, 61:6, 9:31