வங்காளதேசத்தில்போர்குற்ற வழக்கில் தூக்கிலிடப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு ‘குறைபாடுடைய விசாரணை’ தான் காரணம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று இரவு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விடுத்த செய்திக்குறிப்பில், குறைபாடுடைய விசாரணை முறையினால், 1971-ல் டிசம்பருக்கு முன்னதாக குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டு காசிம் அலி தூக்கிலிடப்பட்டதில் பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை அடைந்து உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. குறைபாடு உடைய விசாரணையின் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கும் நடவடிக்கை ஜனநாயக உணர்வுக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.
விசாரணை தொடங்கியதில் இருந்து சர்வதேச அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச சட்டமுகமைகள் வங்காளதேச கோர்ட்டு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன, குறிப்பாக நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் துன்புறுத்தல் குறித்து வெகுவாக புகார்கள் எழுந்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.