பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும் இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஈடுகொடுத்து விளையாடி டெஸ்ட் தொடரை 2-2 என சமநிலைப் படுத்தினார்கள். அனுபவ வீரர்கள் மிஸ்பா மற்றும் யூனிஸ்கான் சிறப்பாக விளையாடினார்கள்.
ஆனால், ஒருநாள் தொடரில் அந்த அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. இதனால் ஏற்கனவே முடிந்துள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியடைந்து தொடரை 0-4 என இழந்துள்ளது.
கார்டிஃபில் இன்று 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 5-0 என தொடரைக் கைப்பற்றி பாகிஸ்தானை ‘ஒயிட்வாஷ்’ செய்யும்.
இப்படி ஒயிட்வாஷ் செய்தால் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எதிர் அணியை இங்கிலாந்து ஒயிட்வாஷ் செய்து சாதனைப் படைக்கும்.
இதற்கு முன் 2001-ல் நசீர் ஹொசைன் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது. புலவாயோவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரை இங்கிலாந்து 5-0 எனக் கைப்பற்றியது. இன்று வெற்றி பெற்றால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை படைக்கும்.
இதற்கு முன் 2012-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 4-0 எனவும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2012-ல் 4-0 எனவும், ஜிம்பாப்வே அணிக்கெதிரான 2004-2005-ல் 4-0 எனவும் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் எதிர் அணியை 8 முறை 3-0 என தோற்கடித்து ஒயிட்வாஷ் செய்துள்ளது.