ஒபாமாவுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சீனா சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வியட்நாம் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றடைந்தார்.

வியட்நாம் விமான  நிலையத்தில் இருந்து சீனாவின் ஹாங்சோ விமான நிலையத்திற்கு சென்ற மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக சீன அதிபர் க்சி ஜின்பிங்-ஐ பிரதமர் மோடி இன்று சந்தித்தார். ஹாங்சோ நகரில் உள்ள வெஸ்ட் லேக் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சீன அதிபர் க்சி ஜின் பிங்-கும் பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தினர்.

ஜி-20 உச்சி மாநாட்டுக்கு முன்னதாக இன்று பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாளை ஜி-20 உச்சி மாநாட்டில் ‘கொள்கை கூட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பாதையை பலப்படுத்துவது’ என்ற தலைப்பில் நிறைவுரை ஆற்றுகிறார்.

ஏற்கனவே சீனா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை மோடி சந்திக்கும் வாய்ப்பு இல்லை என முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஹாங்சோ நகரில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்கள் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துகொண்டபோது, அவரை பிரதமர் மோடி எதிர்பாராத விதமாக சந்தித்து பேசினார்.

சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பின்போது இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர்.