கிழக்குக்கு தனியான சமஷ்டி கோருகிறது கிழக்கின் எழுச்சி

இத்தனை வருட காலங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தமக்கும் ஒரு தீர்வு வேண்டுமென்று நோகாமல் கேட்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
கிழக்கின் அத்தனை முஸ்லிம் கிராமங்களிலும் தமிழ் ஆயுதக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ரத்தம் தோய்ந்த வரலாறுகள் ஆறாத வடுக்களாக இன்னும் ஈரமாய் இருக்கையில் எப்படி நோகாமல் கேட்பதாக கூறமுடியும்?
என்றாலும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தாங்கள் வடக்குடன் சேர்வதுதான் தமது விருப்பமென்று சுயமாகவே  முடிவெடுப்பார்களானால், அவர்களை வடக்குடன் இணையவிடாது தடுப்பதும் பெரும் தவறாகும். அவ்வாறான நிலமையில் அவர்களை வடக்குடன் இணைப்பதில் தவறேதுமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.
கிழக்கில் உள்ள தமிழ் மக்களை வடக்குடன் இணைப்பதை கிழக்கை தாயகமாகக் கொண்ட முஸ்லிம் தேசியம் ஒருபோதும் எதிர்க்காது. 
ஆனால் அது வடக்குடனான கிழக்கின் இணைவாக இல்லாமல் தமிழ்த்தேசியத்தின் பகுதியாக கிழக்கிலுள்ள தமிழ் மக்களை இணைத்துக் கொள்வாதாகவே இருக்க வேண்டும்.
அவ்வாறு இணைக்கப்படும் தமிழ் மக்களின் விகிதாசாரத்துக்கு சமனான நிலப்பரப்பையும், அம்பாரை சிங்களப் பிரதேசங்களையும் தவிர்த்து  எஞ்சும் பிரதேசமான கிழக்கு    மாகாணத்துடன் வடக்கிலுள்ள முஸ்லிம்கள் இணைய விரும்பினால் அவர்களையும் சேர்த்த ஒரு சமஷ்டி ஆட்சி முறையே ஒரு நிரந்தரத் தீர்வாக அமைய முடியும்.
1987ல் கொழும்பிலுள்ள ஒரு அறையில் மக்களின் கருத்து கோரப்படாமல், எல்லை நிர்ணய சபை ஒன்று ஏற்படுத்தப்படாமல், இலங்கை வரை படத்தை வைத்துக்கொண்டு பென்சிலால் பிரிக்கப்பட்ட எல்லைகள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்படல் வேண்டும்.
அம்பாறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது இருந்த விகிதாசாரங்களுக்கேற்ப நிலங்களும் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்று கோருவது, சிக்கலில்லாமல் பெரும்பான்மை உணர்வுகளை சிலுப்பிவிடாமல் நிலங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதே போன்றே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் நிலங்களும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
தமிழர்களுக்குச் சமஷ்டி கொடுத்தால் எங்களுக்கும் சமஷ்டி வேண்டும் என்பதல்ல எமது நிலைப்பாடு.
முன்னெடுக்கப்படும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு சமஷ்டி கொடுக்கப்பட வேண்டுமென்பதே கிழக்கின் எழுச்சியால்  முன்வைக்கப்படும் புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் உள்வாங்கப்பட வேண்டிய அடிப்படையாகும்.
அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்
செயலாளர்
-கிழக்கின் எழுச்சி-