டாக்டர் சனூஸின் மருந்தை விட அவர் எமக்கு ஊட்டும் நம்பிக்கை நோயை சுகப்படுத்துகின்றது

zanus dr

ராஜகிரிய, ராஜகிரிய வீதி இலக்கம் 11 இல் The Healing Medical Service என்ற தனியார் வைத்தியசாலை (டிஸ்பென்சரி) இயங்குகிறது. இதனை நடத்திச் செல்பவர்தான் கொழும்பு தேசிய வைத்தியசாலை டாக்டரான சனூஸ் அவர்கள். 

நானும் எனது மனைவியும் இன்று (02) அவரிடம் சென்றிருந்தோம் வழமையான கூட்டம். இரவு 7.10 க்கு சென்ற நாம் டாக்டரை சந்திக்க சந்தர்ப்பம் 7.40க்கே கிடைத்தது.

எங்களுக்கு முன்னர் வந்த ஒரு நோயாளி அவரது உறவினருடன் மிகுந்த கவலை, பரபரப்புடன் காணப்பட்ட நிலையில் டாக்டரின் அறைக்குள் நுழைகிறார். அவர் உள்நுழையும் நேரம் 7.10 வெளியே வந்த நேரம் 7.40. எனது பொறுமை அங்கு சோதிக்கப்பட்டாலும் ஒரு நோயாளி என்ற நிலையில் அமைதியடைவதனைத் தவிர வேறில்லை.

இந்த நீண்ட நேர காத்திருத்தலின் போது அவர்களுடன் வந்த இன்னொரு பெண் வெளியே எனது மனைவியின் அருகில் அமர்ந்திருந்தார். கொழும்பு மாவட்டத்துக்கு வெளியே உள்ள பிரதேசம் ஒன்றின் சிங்கள குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் டாக்டர் சனூஸை சந்திப்பதற்காக அவ்வளவு தூரத்திலிருந்து வந்து கிரிபத்கொடையிலுள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக அவர் எனது மனவியிடம் தெரிவித்தார்.

எனது மனைவிக்கும் அந்த சிங்களப் பெண்ணுக்குமிடையிலான கலந்துரையாடல் தொடர்கிறது. இதனை நான் தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன்.

எனது மனைவி அந்தப் பெண்ணிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, இவ்வளவு தூரத்திலிருந்து அதுவும் இரவில் இந்த டாக்டரைச் சந்திக்க வந்துள்ளீர்களே என்றார்.

எனது மனவியின் ஒரேயொரு கேள்விக்கு அந்த சிங்கள பெண் வழங்கிய பதில் எங்களை அதிரச்சியடையச் செய்தது, “

என்ன நோய் வந்தாலும் அவரால் வழங்கப்படும் மருந்தை விட அவர் எமக்கு ஊட்டும் நம்பிக்கை, மன வலிமை நோயின் அரைவாசியை சுகப்படுத்துகின்றன.. ஒரு நோயாளியைப் பரிசோதித்து அவர் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அவர் பெறுகிறார். இதற்காக அவர் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். ஒருவருக்கு அதிக நேரம் ஒதுக்க நேரிடுவதால் வெளியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளி வெறுப்புற்று மருந்து எடுக்காமலே போய் விட்டாலும் பரவாயில்லை தனக்கு முன்பாக உள்ள நோயாளியை முழுமையாக பரிசோதித்து மருத்துவ ஆலோசனை மற்றும் உளவியல் ரீதியிலான நம்பிக்கையையும் ஊட்டி நோயாளியின் மனதை இந்த டாக்டர் தேற்றுகிறார். இவருக்கு வழங்கும் மருத்துவ கட்டணத்தை விட அவரது ஆலோசனையும் உற்சாகப்டுத்தும் தன்மைகளும் எங்களைக் கவர்ந்தன. இவரிடம் காணப்படும் இந்தத் தன்மைகள் அனைத்து டாக்டர்களிடம் காணப்படுவதில்லை

வீண் செலவுகளை ஏற்படுத்தமாட்டார். நோயாளியை டென்ஷன் படுத்தி பொய்களைச் சொல்லி பணம் கறக்கமாட்டார். எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். பதட்டத்துடன் உள்நுழையும் நாங்கள் அமைதியாக வெளியே வருகிறோம். நோய்களைச் சரியாக இனங்கண்டு அதற்குரிய மருந்துகளை மடடுமே இந்த டொக்டர் மஹத்தையா தருகிறார்.

அரைகுறை டாக்டர்களிடம் போய் அதிக பணத்தைச் செலவு செய்து நோய்களை அதிகரித்துக் கொள்வதனை விட அனைத்தையும் படித்த இவர்களைப் போன்றோரிடம் நாடிச் சென்று சிகிச்சை பெறுவது நல்லது என்று எனது மனைவியின் ஒரு கேள்விக்கு அந்த சிங்களப் பெண் இவ்வளவு பெரிய பாராட்டுப்பத்திரத்தை டாக்டர் சனூஸுக்கு வழங்கிக் கொண்டிருந்த போது அவரது உறவினரான அந்த நோயாளிப் பெண் மிகுந்த முகமலர்ச்சியுடன் டாக்டரின் அறையிலிருந்து வெளியே வருகிறார்.. 

இதன் போது எனது மனைவி இவ்வாறு கூறினார். “டாக்டர் சனூஸ் மருத்துவம் மட்டுமல்ல உளவியலும் நன்கறிந்துள்ளார். நோயாளிகளை அவர் கையாளும் விதம் அற்புதமானது. வார்தைகள் மூலமே பாதி நோய்களைக் குணப்படுத்துகிறார்.” இது அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரம்.

 

மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்