சம்பளம் பெற்று தருவதாக கூறிய வாக்குறுதி எங்கே ? தொழிலாளர்கள் கேள்வி..

IMG_9939_Fotorக.கிஷாந்தன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்தும் பல பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் இப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது தோட்ட நிர்வாகங்கள் குறைந்த நாட்கள் தொழில் வழங்கி வருவதாகவும், இதனால் பொருளாதார ரீதியில் பாரிய இடர்களை சந்திப்பதாகவும் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

vlcsnap-2016-09-02-14h46m10s7_Fotor

தொழிற்சங்கங்களுக்கு மாதாந்த சந்தா வழங்கிய போதிலும் தொழிற்சங்கவாதிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதில் எவ்விதமான முயற்சிகளும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேரம் பேச கூடிய சக்திகள் இருந்தபோதும் பல போராட்டங்களை முன்னெடுத்தே தமக்கு சம்பள உயர்வை பெற்றுத் தந்தார்கள்.

இன்றும் பேரம் பேச கூடிய சக்திகள் இருக்கின்றபோதிலும் காலத்தை கடக்கின்றார்களே தவிர முடிவை பெற்றுத்தர முடியாத நிலைக்கு உள்ளமை வேதனை தருகின்றது.

மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் தங்களுடைய தொழிற்சங்க வளர்ச்சிக்கும், அவர்களுடைய வளர்ச்சிக்கும் மாத்திரமே செயல்படுகின்றனர்.

மலையக தோட்ட தொழிலாளர்களின் உரிமைகள் கூறு போட்ட நிலையில் இருப்பதற்கு காரணமாக இருப்பது மலையக தொழிற்சங்க தலைவர்களிடம் இருக்கின்ற ஏட்டிக்போட்டிக்கான செயல்பாடாகும்.

இவர்களின் செயல்பாட்டினால் அப்பாவி தொழிலாளர்களாகிய நாங்கள் சிக்குண்டு தவிப்பதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

மாதாந்த சந்தாவை மாத்திரம் அறவிடும் தோட்ட நிர்வாகங்கள் மாதாந்தம் தொழிற்சங்கங்களுக்கு காசோலையை அனுப்புவதில் அக்கறை செலுத்துகின்றார்களே தவிர தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.

தொழிற்சங்க அதிகாரிகள் சந்தாவை பெற்றுக் கொண்டு தொழிலாளர்களுக்கு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் தோட்ட நிர்வாகத்திற்கு ஜால்ரா போடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல தோட்டங்கள இன்று தோட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படாமல் பல ஏக்கர் தேயிலை மலைகளை மூடியுள்ளனர். தோட்ட கமிட்டி தலைவர்கள் மூடப்பட்டிருக்கும் தேயிலை மலை தொடர்பாக தொழிற்சங்க காரியாலயங்களுக்கு முறைபாடுகள் வழங்கிய போதிலும் அதிகாரிகளால் இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் இவ்விடயத்தை தட்டிக்களிப்பதாக இவர் தெரிவிப்பதோடு தேயிலை தோட்ட தொழிலை நம்பியிருக்கும் எங்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்துகள் வரும்.

எனவே தோட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கூடிய அக்கறையுடன் செயல்பட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.