ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் தொழிற்பேட்டையில் தனியர் அச்சக நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர். இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையைத் தொடங்கினர். சிறிது நேரத்தில் குடோனின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
தொழிலாளர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறிய நிலையில், ஒரு அறையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற முடியாத அளவிற்கு சுற்றிலும் நெருப்பு சூழ்ந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதன்பின்னர் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் குடோனில் உள்ள சுமார் 200 சதுர மீட்டர் பரப்பளவு சேதமடைந்தது. குறைந்தது 16 பேர் உடல் கருகி இறந்ததாக மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். மேலும், இது தீ வைப்பு சம்பவமா அல்லது அலட்சியம் காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.