உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடை மனிதர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. அளவுக்கு அதிகமாக நொறுக்கு தீனி, மற்றும் எண்ணை கலந்த கொழுப்பு சத்து மிகுந்த உணவு வகைகள், துரித உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுதல், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் 64 கோடி பெரியவர்களும், 11 கோடி குழந்தைகளும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
அதுவே பல விதமான நோய்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. குறிப்பாக வயிறு, கல்லீரல், பித்தப்பை, கணையம்,கர்ப்பபை, மூளை, தைராய்டு மற்றும் ரத்த புற்று நோய் உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாக காரணம் என தெரிய வந்துள்ளது.
இது குறித்த ஆய்வை உலகசுகாதார மையத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையை சேர்ந்த கிரகாம் கோல்டிஷ் நடத்தினார். உடல் பருமன் மற்றும் அதிக எடையுள்ள 1000 பேரிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் மேற்கண்ட 8 வித புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உடலை பருமன் ஆகாமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.