முன்ஸிப் அஹமட்
மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றபோது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முயற்சித்தார் என்றும், அவரை பேச விடாமல் சில உயர்பீட உறுப்பினர்கள் தடுக்கும் வகையில் கூச்சல் குழப்படி செய்தனர் எனவும் தெரியவருகிறது.
முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஜே.எம். லாஹிர் மற்றும் பளீல் பி.ஏ. ஆகியோர் இணைந்துதான், தவிசாளர் பேசுவதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் அறியமுடிகிறது. மேலும், முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் விலக வேண்டுமெனவும் இவர்கள் கூச்சலிட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
உயர்பீடக் கூட்டத்தில் நடைபெற்ற இந்தக் கூத்துக்கள் தொடர்பில், பலரும் பல கோணங்களிலிருந்து பார்த்து – தமது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வின் மூலம் பசீர் சேகுதாவூத் மூக்குடைந்தார் என்று சிலர் கூறுகின்றனர். ஊடகங்களில் சிங்கமாக உறுமிக்கொண்டிருந்த தவிசாளர், நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் அசிங்கப்பட்டார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
உயர்பீடக் கூட்டத்தில் பசீரை பேசவிடாமல், மேற்படி நபர்கள் கூச்சலிட்டு குழப்படி செய்தபோது, அதனை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தடுத்ததாகவும், தலைவரையும் மீறி, குறித்த நபர்கள் தொடர்ந்தும் பசீருக்கு எதிராகச் சத்தமிட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.காங்கிரசின் முக்கியஸ்தரும், மூத்த உயர்பீட உறுப்பினருமான ஒருவரிடம் கருத்துக் கேட்டோம். நேற்றைய நிகழ்வினை – குறித்த உயர்பீட உறுப்பினர் வேறொரு கோணத்தில் நின்று பார்ப்பதோடு, அதன் விளைவுகள் தொடர்பில் மாத்தி யோசித்து நம்மிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
பசீருக்குத் தெரியும்
நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம் பேசப்படவுள்ளமை தொடர்பில் பசீர் அறிந்திருந்தார்.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்த அழைப்புக் கடிதத்தின் நிகழ்ச்சி நிரலில் அதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, அங்கு ஒரு பிரச்சினை நடக்கும் என்பதை பலரும் அனுமானித்திருந்தனர். மட்டுமன்றி, இப்படியொரு பிரச்சினை நடந்தால், என்ன செய்வீர்கள் என்றும், உயர்பீட உறுப்பினர்களில் சிலர் பசீருக்கு நெருக்கமானவர்களிடம் கூட்டத்துக்கு முன்னதாகவே கேட்டிருந்தனர்.
பாலமுனையில் நடைபெற்ற மு.காங்கிரசின் தேசிய மாநாட்டின் முதலாவது அமர்வில் பசீர் கலந்துவிட்டுச் சென்ற நிலையில், பசீர் இல்லாத இரண்டாவது அமர்வில், மு.கா. தலைவர் ஹக்கீம், பசீரை நையாண்டி செய்து ஆக்ரோசமாகப் பேசியிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.
ஆகவே, அப்படியொரு இக்கட்டான நிலைவரம், நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் ஏற்படுதவற்கான சாத்தியம் அதிகம் இருப்பதை தவிசாளர் பசீரும் அறிவார்.
நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் பசீர் கலந்து கொண்டதும், தாருஸ்ஸலாம் குறித்து மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்த கணக்கு வழக்கில் உடன்பாடில்லை என்று கூறி பேசுவதற்கு எழுந்ததும் பசீரின் திட்டமிட்ட செயற்பாடுகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மீறல்
மு.காங்கிசுக்குள் உட்கட்சி ஜனநாயகம் இருப்பதாக மு.கா. தலைவர் உரத்துப் பேசிவரும் நிலையில், மு.கா. தலைவருக்கு முன்னிலையிலேயே, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரான தவிசாளரை உரையாற்ற முடியாமல் நான்கு நபர்கள் இணைந்து கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்தியமையானது மிக மோசமான ஜனநாயக மீறலாகும். ஒழுக்கமற்ற செயற்பாடாகும்.
ஏற்கனவே, மு.காங்கிரசின் சொத்து விவகாரங்கள் தொடர்பில் தவிசாளர் பசீர், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியமையானது தவறு என்றும், அந்த விடயங்களை கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், மு.கா. தலைவர் ஹக்கீம் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், குறித்த விவகாரங்களைப் பேசுவதற்கு கட்சிக்குள் அனுமதியில்லை என்பதையும், அதற்கான ஜனநாயக சூழல் இல்லை என்பதையும் நேற்றைய உயர்பீட சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன.
தந்திரம்
மு.காங்கிரசின் சொத்து விவகாரங்களை பசீர் ஏன் ஊடகங்களில் பேசினார் என்பதற்கான காரணங்களையும், அவ்வாறு பேசியமைக்கான நியாயங்களையும், நேற்றைய கூச்சல், குழப்படிகளிலிருந்து புரிந்து கொள்ள முடிவதாக, மு.காங்கிரசின் மூத்த உயர்பீட உறுப்பினர் நம்மிடம் தெரிவித்தார்.
மிக நுணுக்கமாக அவதானிக்கும்போது, நேற்றைய சந்தர்ப்பத்தை வேண்டுமென்றும் – தெரிந்தும் – திட்டமிட்டும் தவிசார் பசீர் சேகுதாவூத்தான் ஏற்படுத்தியிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மு.காங்கிரசுக்குள் உட்கட்சி ஜனநாயகமில்லை, கட்சிச் சொத்துக்கள் பற்றிய கணக்கு வழக்குகளைக் கேட்க முடியாது, தலைவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க அனுமதியில்லை என்பதை, நேற்றைய உயர்பீட நிகழ்வுகள் நிரூபித்து விட்டன.
“மு.கா. தலைவர் மற்றும் அவரின் அபிமானிகளின் கைகளில் மண்வெட்டிகளைக் கொடுத்து, அவர்களின் கைகளாலேயே – அவர்களுக்குரிய குழிகளை பசீர் தோண்ட வைத்து விட்டார்” என்று, மேற்படி உயர்பீட உறுப்பினர் மேலும் கூறினார்.
உயர்பீடக் கூட்டத்தில் நேற்று எழுந்த கூச்சல்களுக்கு பின்னால், கட்சித் தலைவரின் ஆசிர்வாதம் இல்லை என்பதை நம்பதற்கு கடினமாக உள்ளதாகவும், குறித்த உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய உயர்பீடக் கூட்டத்தின் பின்னரான செய்தி, ‘பசீர் மூக்குடைந்தார்’ என்பதல்ல. மு.காங்கிரசுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மருந்துக்கும் கிடையாது என்பதாகத்தான் உள்ளது.
நேற்று சறுக்கி விழுந்தவர் பசீரில்லை.