கிழக்கு மாகா­ணத்தில் உள்ள இலங்கை இரா­ணு­வத்தின் முக்­கி­ய­மான முகாம்கள் எவையும் அகற்­றப்­ப­டாது: பாது­காப்பு அமைச்சு

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள இலங்கை  இரா­ணு­வத்தின் முக்­கி­ய­மான முகாம்கள் எவையும் அகற்­றப்­ப­டாது. தேசிய பாது­காப்பில்  கிழக்கும் உள்­ள­டங்கும் என்று இலங்கை பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. 

சர்­வ­தேச  பயங்­க­ர­வாத அச்­சுத்தல் இலங்­கைக்கு இருந்த போதிலும் இலங்கை  முஸ்­லிம்கள் மீது நம்­பிக்கை உள்­ளது எனவும் பாது­காப்பு தரப்பு தெரி­வித்­துள்­ளது. 

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் உள்ள  இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்த நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,  
வடக்கு கிழக்கில் தேவை­யற்ற இரா­ணுவ முகா­ம்­களை அர­சாங்கம் அகற்­றி­யுள்­ளது. வடக்கில் பொது­மக்­களின் காணி­களில் இருந்த இரா­ணுவ முகா­ம்­கள் அகற்­றப்­பட்டு பொது­மக்­க­ளுக்கு மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. 

அதேபோல் கிழக்­கிலும் அனா­வ­சியமான­ முகாம்­களை  அகற்­றி­யுள்ளோம். எனினும் தேசிய பாது­காப்பு விட­யங்­களை கருத்தில் கொண்டே நாம் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள முடியும்.

வடக்­கிலும் கிழக்­கிலும் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக அங்­குள்ள முகாம்­களை முழு­மை­யாக அகற்ற முடி­யாது. 

வடக்கும் கிழக்கும் இலங்­கையின் மாகா­ணங்­களே.

ஆகவே அவற்றை தனித்துச் செயற்­ப­டுத்த அனு­ம­திக்க முடி­யாது. ஆகவே கிழக்கில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான இரா­ணுவ படை முகாம்கள் தேவைப்­ப­டு­கின்­றன.

எனவே அங்­குள்ள முகாம்கள் அகற்­றப்­ப­ட­மாட்­டாது. அதேபோல் வடக்­கிலும் முகாம்­களை முழு­மை­யாக அகற்ற முடி­யாது. 

சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சுறுத்தல் செயற்­பா­டுகள் இலங்­கைக்கும் பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது. பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் இலங்­கையும் சிக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு இருக்­கையில் இலங்­கையின் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை பலப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாயம் எமக்கு ஏற்­பட்­டுள்­ளது. 

எனினும் இந்தக் காரணத்திற்காக இலங்கை முஸ்லிம்கள் மீது சந்தேகப்பார்வையில் செயற்பட முடியாது.

எமது மக்கள்மீது அரசாங்கம் நம்பிக்கை வைத்துள்ளது. அந்த நம்பிக்கையை மக்கள் காப்பாற்றுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.