ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் பெருமழை பெய்து வருகிறது. இதனால் டோக்கியோ மற்றும் பிற நகரங்களில் புறநகர் ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
டோக்கியோ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 10 செண்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால் நிலவரப்படி டோக்கியோவின் ஹனாடா விமான நிலையத்தில் 300 உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நரிடியா சர்வதேச விமான நிலயத்தின் இரண்டு ஓடுபாதைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் இந்த ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளன. டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் புறநகர் பகுதிகளில் புல்லட் ரெயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவின் முக்கிய ரெயில் சேவையான யாமானாட்டோ சர்க்கிள் ரெயில் பாதையில் பெரிய மரம் சாய்ந்து விழுந்ததால் அந்த பாதை முழுவதுமாக அடைக்கப்படுள்ளது.
சூறைக்காற்றினால் 10 பேர் வரை காயம் அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. நிலைமை சீராகும் வரை ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.