வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப் பறிப்புக்கள் அதிகம் இடம்பெறும். சிலவேளை உரிமையாளரான கணவனின் இரகசியம் எதுவும் அவனிடம் மாட்டிக் கொண்டிருந்தாலும், அவன் அதைப் பயன்படுத்துவான். மனைவி, பிள்ளைகளிடம் கணவன் வேறு காரணம் சொல்லிக் கொண்டிருப்பார். இந்த நிலைதான் முஸ்லிம் காங்கிரஸினால் வழங்கப்பட்ட தற்காலிக எம்.பி.க்கும் நடந்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் வழங்கப்பட்ட 2 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பதவியை சட்டத்தரணி சல்மானுக்கு தற்காலிகமாக வழங்கி இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வருடம் நிறைவடைகின்றது. சில வாரங்களுக்கு ‘தற்காலிகமாக’ நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்ட இப்பதவி, ஒரு வருடத்தை கடக்கின்றது. இந்த எம்.பி.யை பொருத்தமான யாருக்காவது வழங்க மு.கா.வின் இரண்டாம்நிலை தலைவர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண சபைக் காரர்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், இவர்களுள் பலருக்கு ஒரு வருடம் போய்விட்டது என்பது கூட தெரியாமலிருக்கும். ஆக மொத்தத்தில், இப்பேர்ப்பட்ட ஒரு பெரும் அரசியல் இயக்கத்தை உருவாக்கிய கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்று, தின்பாருக்கு தேனெடுத்துக் கொடுத்துவிட்டு கையை நக்கிக் கொண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலப்போக்கில் மறந்துபோவார்கள் என்ற அவர்களது கணக்கும் பலித்திருக்கின்றது.
இந்த ஒருவருடத்திலும், கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் எம்.பி. பதவிகளை பயன்படுத்தி இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்காமல் புதுவகையான சிக்கலைகளை தோற்றுவிப்பதற்கு றவூப் ஹக்கீம் அவற்றை காரணமாக்கியிருக்கின்றார். இந்த காலப்பகுதியில் செயலாளருக்கும் தவிசாளருக்கும் கொஞ்ச கொஞ்ச காலம் சுழற்சி அடிப்படையில் எம்.பி.யை வழங்கியிருக்கலாம். இல்லையென்றால், அரசியல் அதிகாரமில்லாத ஊர்களுக்கு, அதுவுமில்லை என்றால் கட்சி கடமைப்பட்டுள்ள முக்கியஸ்தர்களுக்கு அதனை வழங்கி இருக்கலாம். இப் பதவிக்காக சண்டை பிடிப்பவர்கள், இலவு காத்திருக்கும் பிரதேசங்கள் மற்றும் உறுப்பினர்களை இதன்மூலம் சமாளித்திருக்கலாம். அத்துடன் இனிவரும் காலங்களில் ‘எம்;.பி. கோருவோர்’ பட்டியலில் இருந்து இவர்களை வெளியகற்றியிருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை.
டம்மிகளின் வகிபாகம்
2015 ஆகஸ்ட் 17 இல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் பின்னர் அமையப் பெற்ற அரசாங்கத்தில் மு.கா.வுக்கு ஐ.தே.க.வினால் இரண்டு தேசியப்பட்டியல்கள் வழங்கப்பட்டன. இதற்கான உத்தேச தேசியப்பட்டியலில் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன்அலி, தவிசாளர் பசீர், கல்முனை மேயர் நிசாம் காரியப்பர், தலைவரின் சகோதரர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், தலைவரின் நண்பர் எம்.எச்.எம்.சல்மான் ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. இந்தப் பட்டியலில் ஏன் கடைசி இரண்டு பேரினதும் பெயர்கள் போடப்பட்டன என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும். இதில் (டம்மியாக என்றாலும்) போடுவதற்கு மு.கா.விற்குள் வேறு ஆட்கள் இல்லையா? உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சிக்காக அர்ப்பணிப்புக்களை செய்தவர்களின் பெயர்களை போட்டிருக்கலாம். அவ்வாறில்லாவிட்டால் தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டிய ஊர்களைச் சேர்ந்த யாருடைய பெயரையாவது இட்டு நிரப்பியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் ஹபீஸையும் சல்மானையும் போட்டதும், அதை பொறுத்துக் கொண்டிருந்ததும் அடிப்படை தவறுகளாகும்.
அப்படிப் பெயர் போட்டிருக்கத் தக்கதாக, மு.கா.வுக்கு ஒன்றிரண்டு தேசியப் பட்டியலே கிடைக்கும் என்றால், வேறு யாருக்கும் வாக்குறுதி அளித்திருக்கக் கூடாது. ஆனால் பல ஊர்களில் இடம்பெற்ற கூட்டங்களில் தலைவர் ஹக்கீம் அவ்வூர்களுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக சொன்னார். பிரதேச வாரியாக தேசியப்பட்டியல் ஆசையை வலிந்து திணித்தார். அதுபோதாது என்று மு.கா.வின் உறுப்பினர்களுக்கும் எம்.பி. தருவதாக குறிப்பால் உணர்த்தினார். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஹக்கீமின் வீட்டில் சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. எம்.பி. கனவுடன் இருந்த பலரும் ஆட்களை பிடித்து வேன்களில் ஏற்றிக் கொண்டு தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தனர். ஹசன்அலியும் பசீரும் அங்கு எம்.பி. கேட்டு ஆட்களை கூட்டிச் சென்றதாக யாரும் கூறவில்லை. ஆனால், இவ்வாறு எம்.பி. கேட்டு வந்தவர்களை எல்லாம் திருப்பி அனுப்புவதற்கும், இன்னுமொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஹக்கீமுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதனால் ‘ஹசன்அலி எம்.பி.கேட்டு அடம்பிடிக்கின்றார்’ என்றார். அவரது ஜால்ரா அரசியல்வாதிகளும் தம்பங்கிற்கு அறிக்கை விட்டனர்.
தனக்கு பெரியதொரு நெருக்குவாரம் ஏற்பட்டுள்ளது என்று மக்களை பரிதாபப்பட வைத்து விட்டு, செயலாளர் மற்றும் தவிசாளர் மீது பழிகளை திசைதிருப்பிவிட்டு மிக லாவகமான முறையில் தனது சகோதரர் ஹபீஸையும் சல்மானையும் எம்.பி.யாக நியமித்தார் கட்சியின் தலைவர் அப்துல் றவூப் ஹிபத்துல் ஹக்கீம்! இது ஒட்டுமொத்த மு.கா. வாக்காளர்களின் கண்களிலும் மண்ணைத் தூவிய சம்பவமல்ல. மாறாக, விழித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணில் குத்திய அற்பத்தனமான அரசியலாகும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கில் வாழ்வோர் அவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். ஆனால், கிழக்கிற்கு வெளியில் வாழும், கட்சிக்கு பாரிய பங்களிப்பு செய்யாத இருவருக்கு தேசியப்பட்டியல் எம்.பி.களை வழங்கியதன் மூலம் அதனை ஹக்கீம் கொஞ்சம் கெடுத்துக் கொண்டார் என்று சொல்ல வேண்டும்.
உண்மையாகவே சாணக்கியமான, தூரநோக்குள்ள ஒரு தலைமையாக இருந்திருந்தால் அவர் இந்த எம்.பி. பதவிகளை கட்சியின் வளர்ச்சிக்காகவும், எதிர்கால சமூக அரசியல் நலன்களுக்காகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும். யாருக்கு அல்லது எந்த பிரதேசத்திற்கு எம்.பி. பதவி கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளதோ அந்த நபரின் பெயரை பட்டியலில் போட்டிருக்க வேண்டும். ஹசன்அலிக்கும், பசீருக்கும் எம்.பி. கொடுப்பதில்லை என்றால், அவர்களது பெயரை விட்டுவிட்டு, நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஊர்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களையும் அரசியல் அதிகாரம் இல்லாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கி இருக்கலாம். இல்லை, எனது சகோதரனுக்கும் நண்பனுக்கும் எம்.பி. கொடுக்க இக்கட்சி கடமைப்பட்டுள்ளது என்றால், அது எவ்வாறான கடமைப்பாடு என்பதை மக்கள் மன்றத்தில் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால், ‘சொற்ப காலத்தில் இராஜினமாச் செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக தனக்கு நம்பிக்கைக்குரிய இருவருக்கு எம்.பி. பதவிகளை தற்காலிகமாக வழங்குவதாக’ மு.கா. தலைவர் சொன்னார். அதன்மூலம் பட்டியலில் பெயர் போட்டவர்கள், பெயர் போடாத உறுப்பினர்கள், கட்சிக்காக விடுதலைப் புலிகள் முன்னிலையில் முழந்தாழிட்டவர்கள், உயிரைப் பணயம் வைத்து கட்சி வளர்த்தவர்கள், ஆரம்பகால போராளிகள், ஹக்கீமுக்கு தலைமைப் பதவி என்ற கிரீடத்தை வழங்கி அழகு பார்க்கின்ற கட்சியின் உறுப்பினர்கள் எல்லோரையும் நம்பிக்கை குறைந்தவர்களாக செர்லலாமல் சொன்னார். இது மிகப் பாரதூரமான வார்த்தைப் பிரயோகமாகும். பசீரும் ஹசனலியும் நிசாம் காரியப்பரும் பெரிய புனிதர்கள் இல்லை. ஆனால், இவர்கள் மூவரையும் தவிர தனது சகோதரனும், நண்பனும் எந்த வகையில் நம்பிக்கையானவர்கள் என்பதை ஹக்கீம் இன்று வரையும் சொல்லவில்லை. அல்லது, கிழக்கு மக்களுக்கு யாரென்றே தெரியாத ஹபீஸையும் சல்மானையும் விட இந்த மூவரும் ஏன் நம்பிக்கை குறைந்தவர்கள் என்பதையாவது விளங்கப்படுத்தவும் இல்லை என்பதே விமர்சனத்திற்குரியது.
பிராந்தியம் கடந்து
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மக்களின் சொத்து என்றாலும் அதனது பலாபலன்களை தாம் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக கிழக்கு மக்கள் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பிராந்தியவாதம் பேசி அஷ்ரஃப் கட்சி வளர்த்திருந்தால் கிழக்கிற்கு வெளியிலிருந்த எத்தனையோ பேர் எம்.பி. ஆக ஆகியிருக்க மாட்டார்கள். சிலருக்கு அரசியல் முகவரி கூட கிடைத்திருக்காது. கிழக்கு மக்கள் பிரதேச பாடுபாடு பார்ப்பவர்களாக இருந்திருந்தால் றவூப் ஹக்கீமிடம் தலைமைப் பதவியை 16 வருடங்களாக விட்டு வைத்திருக்கவும் மாட்டார்கள். அந்தவகiயில், மு.கா.வின் தேசியப்பட்டியல் என்பது கூட கிழக்கிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதல்ல என்பது உண்மையே. ஆனால் பொருத்தமானவர்களுக்கு, நியாயமான காரணங்களின் அடிப்படையில் அது வழங்கப்பட வேண்டும் என்பதே இங்குள்ள நிபந்தனை.
முஸ்லிம் காங்கிரஸ் என்பது எப்பேர்ப்பட்ட கட்சி என்றால், மிகவும் இக்கட்டான காலப்பகுதியில் லிபரல் கட்சியின் அசித்த பெரேராவுக்கு தேசியப்பட்டியல் எம்.பி.யை வழங்கிய கட்சியாகும்.அவருக்கு ஏன் இதனை வழங்கினோம் என்பதை மறைந்த தலைவர் அஷ்ரஃப் பொது மேடையில் நீண்ட நேரமாக விளக்கிக் கூறினார்.
‘தேசியப்பட்டியல் எம்.பி.யை இராஜினாமா செய்யுமாறு தலைமை கேட்டுக் கொண்டபோது.
எமது மரத்திலே காய்த்துக் கனிந்த சுஹைர் போன்றோர் இராஜினாமா செய்ய மாட்டோம் என்று இருக்கின்ற நிலையில், அசித்த பெரேரா எந்தவொரு வார்த்தையும் சொல்லாமல் தனது தேசியப்பட்டியல் எம்.பி.யை இராஜினாமாச் செய்து எங்களை கண்ணியப்படுத்தி பொத்துவில் தொகுதிக்கு ஒரு நியமன அங்கத்தவரை நியமிக்கும் வாய்ப்பை தந்தார். உங்களுக்கு தெரியும் தலைவருக்கு ஒரேயொரு மகன் இருக்கின்றார். வாழ்க்கையில் ஒரு மனிதனை பின்பற்ற வேண்டுமென்றால், அது அசித்த பெரேரா மாத்திரம்தான் என்று தலைவர் அப் பிள்ளைக்கு இறுதியுபதேசம் செய்திருக்கின்றார்’ என்று அவர் சொன்னார். ‘நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள். கொடுத்த வாக்கை நாங்கள் நிறைவேற்றியாக வேண்டும். வாக்கை நிறைவேற்றுதல் மிகவும் முக்கியமான விடயம். பொய் பேசாமல் இருத்தல் மிகவும் முக்கியமான விடயம். இந்தப் பண்புகளை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் அசித்த பெரேராவிடம் பார்க்கலாம்’ என்று குறிப்பிட்டார். இன்னும் அவர் பற்றி அஷ்ரஃப் பல விடயங்களை சிலாகித்துப் பேசினார். ஆனால், சல்மானுக்கும் ஹபீஸிற்கும் எம்.பி. கொடுத்தது ‘நம்பிக்கை’ என்று மட்டுமே இன்றைய தலைவர் சொன்னார். அது என்னமாதிரியான நம்பிக்கை என்பதை சொல்லி தனது தீர்மானம் சரி என்பதை நிரூபிப்பதற்கு அவர் முன்வரவில்லை.
இவ்விருவருக்கும் ‘தற்காலிகமாக’ எம்.பி. கொடுக்கப்படுவதாகவே ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதாவது இரண்டு மூன்று வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் மீளப் பெறப்பட்டுவிடும் என்று அப்போது மு.கா. சொன்னது. ஆனால், இப்பதவிகள் பல மாதங்களுக்கு இழுத்துச் செல்லப்படும் என்று அப்போது வீரகேசரியில் எழுதியிருந்தேன். அதுவே இன்று நடந்திருக்கின்றது. 2015 ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஹபீஸ், சல்மான் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுள் – கிட்டத்தட்ட ஐந்து மாதங்களில் டாக்டர் ஹபீஸ் இராஜினாமாச் செய்தார். அவ்விடத்திற்கு திருமலை தௌபீக் நியமிக்கப்பட்டார். ஒரு வீட்டுக்குள்ளேயே இரண்டு எம்.பி.க்களை வைத்திருந்தோமே என்பதை மறந்து, ‘ஒரு ஊருக்கு இரண்டு உறுப்பினர்கள் கேட்பது நியாயமில்லை’ என்ற தோரணையில் கருத்துக்களை வெளியிட்ட தலைவர் ஹக்கீம், ‘அதிகாரமில்லாத பிரதேசங்களுக்கு அதிகாரம் வழங்குதல்’ என்ற அடிப்படையிலேயே திருமலைக்கு அப் பதவியை வழங்கினார்.
தற்காலிகத்தின் நீளம்
ஆனால், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இந்த நிமிடம் வரைக்கும் தனக்கு வழங்கப்பட்ட அமானிதமான பதவியை இராஜினமாச் செய்யவில்லை. அதனை வாங்கியெடுத்து அதிகாரமில்லாத பிரதேசத்திற்கு அதிகாரம் வழங்குவதற்கோ, கட்சியின் கோட்டைகளில் உள்ள சரிவுகளை சரிக்கட்டுவதற்கோ அன்றேல் கட்சியை உயிரிலும் மேலாக நேசிக்கின்ற கிழக்கைச் சேர்ந்த முக்கியஸ்தர் யாருக்காவது அதைக் கொடுப்பதற்கோ தலைவர் நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியவுமில்லை. இதுபற்றி விசாரித்துப் பார்த்த போது, ஹக்கீம் – சல்மானின் நட்பு அப்பேற்பட்டது என்றும், சல்மானை இராஜினமா செய்யுமாறு வலுக்கட்டாயமாக தலைவர் சொல்லவும் மாட்டார், சொன்னாலும் அவர் எவ்வித மறுப்பும் இன்றி இராஜினாமாச் செய்யக் கூடியவரும் அல்ல என்று கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
முன்னர் ஒரு தடவை தற்காலிக எம்.பி.யாக பதவிவகித்த சல்மான், இம்முறை இப்பதவியை கொஞ்சம் அனுபவிக்க எண்ணியிருந்ததாக அவருடன் நெருக்கமாக பழகியோர் கூறியதாக அறியவருகின்றது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் தனது திட்டத்தில் வெற்றியடைந்துள்ளார் என்றும் சொல்லலாம். ஆக, ‘தற்காலிகம்’ என்ற சொல், சல்மானின் விடயத்தில் ஒரு வருடமாகியிருக்கின்றது. ஹக்கீம் சொன்ன தற்காலிகம் இன்னும் முடிவுக்கு வரவும் இல்லை. ஒரு சுழற்சி முறையான எம்.பி.பதவி போலவே ஹபீஸ் அதனை அனுபவித்தார், சல்மான் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். அவர் சுழற்சிமுறை எம்.பி.யா அல்லது நிரந்தரமாக அவருக்கு அது எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டதா என்ற கேள்விக்கு விடையில்லை.
மு.கா. தலைவரின் அகராதியில், ‘தற்காலிகம்’ என்பது எத்தனை மாதங்கள், வருடங்கள் என்பதை அறிந்து கொண்டால் அந்த கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.
ஏ.எல்.நிப்றாஸ்