உள்ளூராட்சி சபைகளை கலைத்தமையால் ஐ.தே.கட்சிக்கு தெளிவான சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது

உள்ளூராட்சி சபைகளை கலைத்தமையால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவான சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகத்தை ஏற்படுத்திக்கொடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை அமைதியாக கண்காணித்து கொண்டிருக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பிரபலமானவர்களை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுப்படும் பொறுப்பை இறுதியின் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ஏற்க வேணடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அமைப்பாளர் பதவிகளில் இருந்து பிரபலமானவர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மிகப் பெரிய வாக்கு வங்கி கொண்டுள்ள அமைப்பாளர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு, குறைந்த வாக்கு வங்கியை கொண்டுள்ளவர்களை அமைப்பாளர்களாக நியமித்துள்ளமையான ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகத்தை ஏற்படுத்தும்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த புத்தளம் மாவட்டத்தில் சகல அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும் போது, மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர்.

தற்போது நீக்கப்பட்டுள்ள அமைப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் தமது மாவட்டங்களில் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றவர்கள்.

உதாரணமாக பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர். திலும் அமுனுகம கண்டி மாவட்டத்தில் மூன்றாவதாக அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர்.

எஸ்.எம். சந்திரசேன, ரோஹித்த அபேகுணவர்த, மகிந்த யாப்பா அபேவர்தன, சீ.பீ. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி தமது மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பிரபலமான அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது சுதந்திரக் கட்சியின் தூண்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் காலத்தில் இருந்து இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து 17 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.