துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் மாகாணத்தின் மத்திய இபேக்யோலு மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய தலைமையகம் மற்றும் குடியிருப்பை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் நாட்டு எல்லையருகே நடந்த இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 219 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்ததையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு படையினரை குறிவைத்து குர்திஷ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, இந்த தாக்குதலுக்கும் அவர்களே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பினால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) தென்கிழக்கு குர்திஷ் பகுதியில் சுயாட்சி அமைப்பதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆயுத தாக்குதல் மற்றும் சண்டையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.