முகம்மது தம்பி மரைக்கார்
நமது வட்டத்துக்குள் நிகழாத மரணங்கள், அநேகமாக ஒரு செய்தியாகவே நம்மைக் கடந்து செல்கின்றன. எல்லா மரணங்களும் எல்லோருக்கும் வலிப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு மரணமும் வலிகளால் நிறைந்தவை. சில மரணங்கள் – நம்மை நடைப் பிணங்களாக்கி விட்டுச் செல்கின்றன. ஓர் ஊதுபத்தி எரிந்து உதிர்ந்து போவதைப் போலான – சில இளவயது மரணங்களைக் காணுகின்ற போதெல்லாம், இரக்கமில்லாத இறப்பை மனசு நொந்து கொள்கிறது.
நா. முத்துக்குமார் என்கிற ஓர் ஊதுபத்தி – நாப்பத்தொரு வயதுக்குள் எரிந்து, உதிர்ந்து, அணைந்து போயிற்று. அற்ப ஆயுளில் இறந்துபோனாலும், அவருடைய படைப்புக்களின் நறுமணத்தில், அவர் – மிதந்துகொண்டிருப்பார்.
சுப்ரமணிய பாரதி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நா. முத்துக்குமார் என்று, நல்ல பல கவிஞர்களை, மரணம் – இளவயதில் வேட்டையாடித் தீர்த்து விட்டது. இறக்கும்போது பாரதிக்கு வயது 39, பட்டுக்கோட்டையாருக்கு 29, முத்துக்குமாருக்கு 41. இவை இறக்கும் வயதில்லைதான் என்று மனசு சொன்னாலும், இறப்புக்கு வயதில்லை என்கிற பேருண்மை – நம்மை ஊமைகளாக்கி விடுகிறது.
தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார், ஒரு பட்டாம்பூச்சியாக – தமிழ் சினிமாப் பாடல்களை, தனது எழுத்தின் இறக்கைகளில் சுமந்துகொண்டு, ரசனையின் வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றவர்.
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பதுதான் முத்துக்குமாரின் ஆசையாக இருந்தது. அந்தக் கனவுகளுடன்தான் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதை நிறைவேற்றிக் கொள்ள, பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து 04 வருடங்கள் பணியாற்றினார். ஆனாலும், ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவுமே தமிழ் சினிமா – அவரை அடையாளம் கண்டது.
தன்னுடைய இறப்பைத் தெரிந்து கொண்ட ஒருவன்போல், 41 வயது ஆயுளுக்குள், ஆகாயமளவு வாழ்ந்திருக்கின்றார் முத்துக்குமார். கடந்த 11 வருடங்களில், ஒவ்வொரு ஆண்டும் – தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை அவரே எழுதியிருந்தார். 2000ஆம் ஆண்டு ‘வீரநடை’ என்கிற திரைப்படத்துக்கு, முதல் பாடலை எழுதினார். இறக்கும்போது 1500 பாடல்களுக்கு மேல் எழுதி முடித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு மட்டும் 35 திரைப்படங்களில் 107 பாடல்களை எழுதினார். அணையப் போவது தெரியாமலேயே, அந்த விளக்கு – இப்படி அதிக பிரகாசத்தோடு எரிந்கொண்டிருந்தது.
மொழியில் பாண்டித்தியம் பெற்றுக்கொண்டு, தமிழ் சினிமாவுக்குள் பாட்டெழுத வந்தவர்களில் முத்துக்குமாரும் ஒருவர். தமிழில் முதுமானி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர். அதனால், அவருடைய பாடல்களில் தனித்துவமும், தனி அடையாளமும் இருந்தன.
அவரின் கற்பனைகள் அற்புதமானவை. பெண்களை கவிஞர்கள் ஏராளமாக வர்ணித்து விட்டார்கள். பெண்ணின் வெட்கப்படும் குணத்துக்காக, அவளை – ‘லஜ்ஜாவதியே’ என்று அவர் அழைத்தார். ‘லஜ்ஜை’ என்றால் வெட்கம் என்று அர்த்தமாகும். அந்தக் கற்பனை அசத்தலானது. ஜாசிகிப்ட் இன் இசையிலும் குரலிலும் ‘லஜ்ஜவதியே… என்ன அசத்துற ரதியே’ என்கிற அந்தப் பாடல், துள்ளி விளையாடியது.
‘லஜ்ஜாவதியே’ பாடலின் முதல் சரணம் இன்னும் அழகானது. காலம் களவாடிச் சென்ற கிராமத்து வாழ்வின் சிறுபராய நினைவுகளை, ஒரு காதல் பாடலில் சொல்லும் தைரியம் முத்துக்குமாரின் தமிழுக்கிருந்தது.
‘பூவரச இலையிலே, பீப்பி செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூட பாடம் மறந்து, பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர, தலைதெறிக்க ஓடினோம்
பனங்காயின் வண்டியில், பசுமாட்டுத் தொழுவத்தை
சுற்றிவந்து பம்பாய்க்கு போனதாக சொல்லினோம்
அடடா வசந்தம், அதுதான் வசந்தம்
மீண்டும் அந்தக் காலம் வந்து, மழலையாக மாற்றுமா’
என்கிற அவரின் வரிகளைக் கேட்கும்போதெல்லாம், மனசு குழந்தையாகி, வசந்த காலத்துக்குள் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுகிறது.
நா. முத்துக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மூத்தவர் ஆண் பிள்ளை, 09 வயது. இரண்டாவது – பெண் குழந்தை, 08 மாதம்தான் ஆகிறது. இப்படியொரு சூழ்நிலையில் அவரின் இழப்பு பலருக்கும் பேரிடியானது.
இந்தியக் கவிஞர் மனுஷ்ய புத்திரனும், நா. முத்துக்குமாரும் நீண்ட கால நண்பர்கள். முத்துக்குமாரின் மரண வீட்டுக்குச் சென்றுவந்த பிறகு, பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய துயரை மனுஷ்ய புத்திரன் எழுதிப் பகிர்ந்துள்ளார். அதைப் படித்தபோது, முத்துக்குமாரின் மரணம் நமக்கும் வலித்தது. ‘நமது சாவுக்கு வந்து – தோள்கொடுக்க வேண்டியவர்களின் சாவுக்கு, நாம் போய் நிற்பதுதான் சோகங்களிலும் துயரமானது’ என்று மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ளார். இவ்வாறான மரணங்கள்தான், வாழ்வின் இயலாமையை புரிய வைக்கின்றன.
நா. முத்துக்குமார் – ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி, நல்லதொரு அறிவாளியாகவும் இருந்தார் என்று வியக்கின்றார் இந்திய எழுத்தாளர் சாரு நிவேதிதா. முத்துக்குமாரின் தந்தை மிகப்பெரியதொரு வாசகராக இருந்தார். அதனால், அவர் தனக்கென்று ஒரு நூலகத்தினையே வைத்திருந்தார். தந்தையின் நூலகம்தான் முத்துக்குமாரை இலக்கியத்தின் பக்கம் இழுத்துச் சென்றது.
வாசிப்பினால் தன்னை நிறைத்துக் கொண்ட கவிஞர் நா. முத்துக்குமார், ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், பட்டாம் பூச்சி விற்பவன், ஆணா ஆவண்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு மற்றும் வேடிக்கை பார்ப்பவன் என்று அவர் எழுதிய நூல்களின் பட்டியல் நீளமானது.
நியூட்டனின் மூன்றாம் விதி என்பது, நா. முத்துக்குமாரின் மூன்றாவது கவிதை நூலாகும். அதில் உள்ள ‘அனுமதி இலவசம்’ என்கிற கவிதை, கிராமத்து மரண வீடொன்றுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
‘தாத்தாவின் மரணத்தை
வெளிநாட்டில் பார்ப்பதற்காய்
வீடியோ எடுத்தார்கள்.
கொடுத்து வைக்காத பாட்டி
விஞ்ஞானத்திற்கு அடங்காமல்
முன்னமே இறந்துவிட்டாள்.
மாரடித்து அழும் பெண்கள்
முந்தானையை திருத்திக் கொண்டதும்,
அழுவதை நிறுத்தி
கேமராவைப் பார்த்து புன்னகைத்ததும்,
தாத்தா வளர்த்த நாய்
கால்களை நக்கிக் கொண்டிருந்ததும்,
நிகழ்வின் மூன்று உறுத்தல்கள்’.
கவிஞரும், பாடலாசிரியருமான பா.விஜய்யும், நா. முத்துக்குமாரும் சமகாலத்தில் சினிமாவுக்குப் பாட்டெழுத வந்தவர்கள். பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு அலைந்த காலங்களிலேயே இருவருக்குமிடையில் உறவிருந்தது. விக்ரமன் இயக்கிய ‘வானத்தைப்போல’ திரைப்படத்தில், பா. விஜய்யும், முத்துக்குமாரும் இணைந்து ஒரு பாடலை எழுதியிருந்தார்கள். ஒரு பாடலை இருவர் சேர்ந்து எழுதுவதென்பது, தமிழ் சினிமாவில் நிகழும் அபூர்வ நிகழ்வாகும். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்பது அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளாகும்.
இயக்குநர் விக்ரமன் ‘வானத்தைப் போல’ திரைப்படத்துக்கு பாட்டெழுத, பா. விஜய்யையும், நா. முத்துக்குமாரையும் அழைத்திருந்தார். அது அவர்களின் ஆரம்ப காலம். குறித்த பாடலின் மெட்டினை இயக்குநர் ஒலிக்க விட, இருவரும் அதற்கு வரிகளை எழுதப் போகிறோம் என்றார்கள். இயக்குநருக்கு தர்ம சங்கடம். ‘சரி, இருவரும் எழுதுங்கள், யாருடைய வரிகள் நன்றாக இருக்கின்றனவோ, அவற்றினை எடுத்துக்கொள்கிறேன்’ என்றார்;. இருவரும் எழுதினார்கள், எழுதியதை இயக்குநரிடம் கொடுத்தார்கள். இருவரின் பாடல் வரிகளும் இயக்குநர் விக்ரமனுக்குப் பிடித்துப் போயிருந்தன. அதனால், இருவரும் எழுதியதில் மிக நல்ல வரிகளைச் சேர்ந்து – அந்தப் பாடலை உருவாக்கலாமென்றார் இயக்குநர். ‘உங்கள் இருவருக்கும் இதில் உடன்பாடு என்றால் சொல்லுங்கள்’ என்று இயக்குநர் மேலும் கூறினார். இருவருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தாலே போதும் என்கிற மனநிலை. அதனால், ‘சரி’ என்றார்கள். இருவரின் வரிகளிலும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் உருவானது.
முத்துக்குமாரின் மரணத் துயரை ஊடகமொன்றுடன் கவிஞர் பா. விஜய் பகிர்ந்து கொண்டபோது, மேற்சொன்ன சம்பவத்தினையும் நினைவுபடுத்திக் கொண்டார்.
பயணம் செய்வதில் கவிஞர் முத்துக்குமாருக்கு அலாதிப் பிரியம். ‘காரில் ஏறிக்கொண்டால், நாங்கள் இருவரும் பேசத் தொடங்குவோம். பேசி முடியும் வரை, கார் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படிப் பயணிப்பதில் அவருக்கு அலாதிப் பிரியம்’ என்று, கவிஞர் நா. முத்துக்குமார் குறித்தும், அவருடனான நட்புக் குறித்தும் இயக்குநர் சமுத்திரக்கனி கூறுகின்றார். ஆனால், உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பதில், ஆர்வமற்ற ஒருவராக முத்துக்குமார் இருந்து விட்டார் என்று, எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆதங்கப்படுகின்றார். ஒரு புத்தகத்தில் தூசுபட்டால் கூட, அக்கறையெடுத்து அதைச் சுத்தப்படுத்தும் எங்களில் பலர், நமது உயிரைச் சுமக்கும் உடல் மீதும், அதன் ஆரோக்கியம் மீதும் அக்கறையெடுத்துக் கொள்வதில்லை என்று, சாரு நிவேதிதா கோபப்படுகிறார்.
நா. முத்துக்குமாரின் ஆளுமைக்கும், திறமைகளுக்கும் அவருக்குக் கிடைத்த விருதுகள் சாட்சியாக இருக்கின்றன. இத்தனை இளம் வயதில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை தமிழில் இரண்டு தடவை முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். 2013ஆம் ஆண்டு தங்க மீன்கள் திரைப்படத்தில் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற பாடலுக்கும், 2014 ஆம் ஆண்டு சைவம் திரைப்படத்துக்காக எழுதிய ‘அழகே அழகே’ பாடலுக்கும் தேசிய விருதுகள் அவருக்குக் கிடைத்தன.
ஆனாலும், தமிழ் இலக்கியத்துக்கும் – திரையுலகுக்கும் விருதாகக் கிடைத்த அந்தக் கவிஞனை, காலம் பறித்துக் கொண்டது. முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்தபோது, கவிஞர் வைரமுத்து கூறியமையினைப் போல, ‘மரணத்தின் சபையில் நீதியில்லை’.
‘மரணம் என்பது ஒரு கறுப்பு ஆடு
பல சமயங்களில்
அது நமக்குப் பிடித்தமான ரோஜாக்களை
தின்று விடுகிறது’
நன்றி – தமிழ் மிரர்