அமெரிக்கா மற்றும் நோர்வே உள்ளிட்ட பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.
ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டமூலம் நடைமுறைக்கு வருவதை தடுக்க வேண்டும் .
இல்லையெனில் வரலாறு காணாத பாரிய போராட்டங்களை எதிர் கொள்ள நேரிடும் என கூட்டு எதிர்க் கட்சி எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் குடும்ப உறவு முறைகளை கொண்டிருந்த நாடுகள் இலங்கையை பிளவுபடுத்தவும் போருக்கு தலைமை தாங்கியவர்களை விஷேட நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தூக்கிலிடவுமே காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகின்றது. இந் நிலையில் நல்லிணக்க சட்டமூலத்தையும் விஷேட நீதி மன்றுக்கான சட்டமூலத்தையும் மிக விரைவில் கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று திங்கட் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில் ,
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாத்திரம் விஷேடமாக செயற்படுவது பல்வேறு சந்தேகங்களுக்கு காரணமாகியுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் எதிர்வரும் 23 ஆம் திகதியே பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவிருந்தது. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் கபடத்தனமாக செயற்பட்டு கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அந்தச் சட்டமூலத்தை சமர்பித்து 45 நிமிடத்தில் நிறைவேற்றியது.
அந்த 45 நிமிடம் நாட்டின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட போர் வெற்றியினை சூன்யமாக்கி இராணுவத்தை தூக்கிலிடுவதற்கு அடித்தளமாக அமையும் என யாரும் சிந்திக்கவில்லை.
பாராளுமன்றத்தை மிகவும் மோசமான முறையில் வழிநடத்தியே இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு வழங்கப்படும் அதிகாரம் எல்லையற்றது. உச்ச நீதிமன்றத்தால் கூட தகவல் கேட்க முடியாதளவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யாரை வேண்டுமென்றாலும் விசாரணை செய்யவும் , எந்த இடத்திற்கும் செல்லவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 48 மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
அதே போன்று காணாமல் போனவர்கள் தொடர்பாக சாட்சிகளின் இரகசிய தன்மை வெளியிடப்படமாட்டாது. சர்வதேசத்தினருடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் நிதி பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .
இதில் மிகவும் மோசமான நிலைமை என்னவென்றால் சாட்சி ஆதாரங்கள் விஷேட தரப்பிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரில் ஈடுபட்ட இராணுவத்தையும் அதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர்களை குறி வைத்துமே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. விரைவில் நல்லிணக்கம் மற்றும் விஷேட நீதிமன்றுக்கான இருவேறு சட்டமூலங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் தொடர்ந்தும் பிரிவினைவாதத்திற்கு துணை போகின்றன.
குறிப்பாக நோர்வே விடுதலைப் புலிகளுடன் குடும்ப உறவு முறையை கொண்டிருந்தது. அதே போன்று அமெரிக்காவும் சிவப்பு இந்தியர்களுக்கு எதிராக எவ்வாறு ஆயுதமற்ற போரில் ஈடுபட்டதோ அதனையே தற்போது இலங்கையில் செய்ய முற்படுகின்றது.
ஆனால் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக நடவடிக்கைகளை தடுப்பதற்கு அனைத்தையும் செய்வோம். நாட்டிற்கு எதிராக சதி நடக்கும் போது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.
இவற்றை ஜனாதிபதி அவதானத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.