அமெரிக்க நாட்டின் வரலாறு கண்ட மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன் ஒபாமா பதவி விலகுவார் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நாட்டின் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார்.
பொய்க்காரி, பித்தலாட்ட பேர்வழி என்றெல்லாம் ஹிலாரியை விமர்சித்துவரும் அவர் நேற்று ஹிலாரி ஒரு சாத்தான் என்று கூறினார். அவ்வப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:-
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைக்காது என முன்னர் ஒபாமா கூறினார். பின்னர், தேர்தல்வரை நான் தாக்குப்பிடிக்க மாட்டேன் என்றார். இப்போது, ஒருவேளை டொனால்ட் டிரம்ப் தேர்தலில் ஜெயித்தால்.., என்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சிரியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒபாமா ஒரு பயங்கரமான அதிபர், பெரும் பேரழிவாக இருக்கும் அவர் அமெரிக்க நாட்டின் வரலாறு கண்ட மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன்தான் பதவி விலகுவார் .
இவ்வாறு அவர் கூறினார்.