இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு – மழையால் ஆட்டம் மீண்டும் பாதிப்பு

Virat Kohli, Darren Bravo

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 196 ரன்னில் சுருண்டது. பிளாக்வுட் அதிகபட்சமாக 62 ரன் எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட் சாய்த்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ராகுல் (158), ரகானே (108) சதம் அடித்தனர். ரோஸ்டன்சேஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

302 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட்இண்டீஸ் 2-வது இன்னிங்சை ஆட இருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 3-வது நாளில் மழையால் 46.1 ஓவர்களே வீசப்பட்டது.

இதே போல நேற்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 3-வது ஓவரில் சந்திரிகா ஒரு ரன் எடுத்து இஷாத்சர்மா பந்தில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 5 ஆக இருந்தது. அடுத்து பிராவோ, பிராத் வெயிட்டுடன் ஜோடி சேர்ந்தார்.

10.2-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.

மழை விட்ட பிறகு விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. முகமது ‌ஷமியின் அபாரமான பந்து வீச்சால் பிராவோ (20 ரன்), சாமுவேல்ஸ் (0) ஆட்டம் இழந்தனர். பிராத் வெயிட் (23 ரன்) விக்கெட்டை அமித்மிஸ்ரா கைப்பற்றினார்.

வெஸ்ட்இண்டீஸ் அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் 4-வது முறையாக பாதிக்கப்பட்டது.

பலத்த மழையால் நேற்றைய ஆட்டம் அதோடு நிறுத்தி வைக்கப்பட்டது. 15.5 ஓவர்கள் மட்டுமே நேற்று வீசப்பட்டன. மழையால் வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் தப்பித்தது.

இன்று 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடக்கிறது. இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 256 ரன் எடுக்க வேண்டும். கைவசம் 6 விக்கெட் உள்ளது. இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.