புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை

கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவ வீரர்கள் எறும்புகளுக்கு கூட தீங்கினை விளைவிக்காதவர்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளது என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானது என குறிப்பிட்டார்.

அவ்வாறான செயற்பாடுகளை இராணுவத் தரப்பு எப்போதுமே மேற்கொள்ள வில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை போர்ட் சிட்டி தொடர்பில் மீண்டும் புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

நாட்டின் இடங்கள் ஒரு போதும் வெளிநாடுகளுக்கு வழங்கப்படாது. 99 வருடகாலத்திற்கு குத்தகை என்ற அடிப்படையில் மட்டுமே இவை வழங்கப்படவுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்காக தண்டப்பணம் அறவிடவுள்ளதாக சீன அரசு தெரிவித்தது. குறித்த தண்டப்பணத்திற்கு பதிலாக 2 ஹெக்டயர் நிலப்பகுதியே சீன அரசிற்கு கொடுக்கப்படவுள்ளது.

மேலும், போர்ட் சிட்டியில் நவீனமயப்படுத்தப்பட்ட கார் பந்தயத்திடல் அமைக்கப்படாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.