சுஐப் எம்.காசிம்
உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழாவில் பிரதமவிருந்தினராக அமைச்சர் றிசாத் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக அங்கு இடம்பெற்ற கண்காட்சியையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கல்லூரியின் அதிபர் மௌலவி அஷ்ரப் முபாரக் அல் ரஷாதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதிதிகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி, இஷாக் ரஹ்மான், உலமாக்களான அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், அப்துல்லாஹ் ஹசரத், மௌலவி பி.ஏ.சுபியான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் மஜீத், டாக்டர் இல்யாஸ், முன்னாள் உபவேந்தர் ஆகியோர் உட்பட வெளிநாட்டு, உள்நாட்டு மார்க்க அறிஞர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர் றிசாத் இங்கு கூறியதாவது,
உலமாக்கள் முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்பற்ற வழிகாட்டிகள். உலமாக்களின் பண்பையும், நடத்தையையும் முஸ்லிம்கள் பின்பற்றக்கூடிய வகையில் அவர்களின் வாழ்க்கை தூயதாக அமையவேண்டும். ஆன்மீக ரீதியாக முஸ்லிம்கள் மேம்பாடு அடைவது பூரணமாக உலமாக்களின் வழிகாட்டலிலேயே தங்கி இருக்கின்றது.
நமது நாட்டிலே மதரஸாக்கள் அதிகமாக இருக்கின்றன. வருடாவருடம் இந்த மதரஸாக்களிலிருந்து மௌலவிமார்களும், ஹாபிழ்மார்களும் பட்டம்பெற்று வெளியேறுகின்றனர். இவர்கள் தமது மார்க்கக் கல்வியை அவற்றுடன் மாத்திரம் மட்டுப்படுத்திவிடக் கூடாது. மேலும் படிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக உலமாக்களுக்கு ஏனைய மொழிகளிலும் பாண்டித்தியம் தேவைப்படுகின்றது. பிறமதத்தினருக்கும், பிறமொழி பேசுவோருக்கும் இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் பற்றிய உண்மயான விடயங்களை கூறமுடியும். வேற்றுமொழியில் நாம் சரளமாகப் பேசுவதன் மூலம் இஸ்லாத்துக்கெதிரான சவால்களை முறியடிக்க முடியும்.
நமது நாட்டிலுள்ள மதரஸாக்கள் முறையான பாடத்திட்டத்தின் கீழ், ஒரே குடையின் கீழே கொண்டுவரப்படவேண்டியதன் அவசியத்தை நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம். இந்தவகையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு ஜம்மியத்துல் உலமா முன்வர வேண்டும். இதன் மூலம் தேர்ச்சிபெற்ற உலமாக்களை நமது சமூகத்துக்கு வழங்கமுடியும்.
முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டின் உயர்துறைகளில் பணியாற்றும் நமது சமூகம் சார்ந்தவர்களின் விகிதம் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. கல்வித்துறையிலே முஸ்லிம் சமூகம் காட்டும் ஆர்வம் போதாது. இவ்வாறான முயற்சிக்கு உலமாக்கள் தமது பிரசங்கங்களை பயன்படுத்த முடியும். அத்துடன் ஒழுக்கமுள்ள, உயரிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு உலமாக்கள் காத்திரமான பணியை ஆற்றமுன்வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.