ஆதவன் எழுந்த ஊரிது ஆழிக்கடலில் தாழ்ந்திடுமுன்னே காத்திடு ரஹுமானே !

oluvil beach

ஆயிரம் விளக்குடன் 

ஆதவன் எழுந்த ஊரிது

ஆழிக்கடலில் தாழ்ந்திடுமுன்னே 

காத்திடு ரஹுமானே…

 

வெளிச்சம் வீசி 

வெளியைக் காட்டிய 

கலங்கரை விளக்கு இன்று

கடலினுள் அணைந்திடுமோ ரஹ்மானே…

 

கப்பல் வருமென்று 

கல்போட்டு காத்திருந்தோம்

கடல் வந்து தட்டுமென்று

கனவிலும் நினைக்கலையே…

 

ஆலமரமாய் வளர்ந்த அரசியலுக்கும்

ஆணிவேராய் இருந்த மண்ணிது

ஆண்டுதோரும் கூடிக்கழிந்தோரே

அழியும் ஊரை பாருங்களேன்…

 

மர்ஹூம் அஷ்ரஃப்பின் 

மகத்தான சேவை பல 

மண்ணோடு மக்கிப்போக 

மனம் தாங்குதில்லையே…

 

வாடி வீடுகளும் 

கரவலை தோணிகளும்

கருவாட்டு கூடைகளும் 

வாடைகூட காணலியே இன்று…

 

களியோடை ஆற்றுடன்

கடலும் கலக்குமுன்னே

கெறவல் பாதை என்ன 

தெண்ணம் தோட்டமென்ன..

 

இயற்கை எழில் கொஞ்சி

காதல் மொழி நெஞ்சி

காற்றோடு உறவான 

பழைய ஊரெங்கே ..

 

நினைக்கும் போதும் பொங்கி

வழிகிறது கண்ணில் தண்ணீர்

உள்ளம் வெந்து இறைஞ்சுகின்றேன்

எம்மூரை காத்திடு யா அல்லாஹ்…

 

கல்லை போடுவியளோ

மண்ணை போடுவியளோ

தாமதமின்றி விரைந்து வாங்கோ

இருப்பதையாவது தக்க வைப்போம்…

 

அரசியல் பேசவோ

அதிகாரம் காட்டவோ நேரமில்லை 

அழிவது ஊரல்ல ஒலுவில் என்னும் 

தென்கிழக்கின் அழகு 

இது 

எம் தலைவரின் கனவு…

oluvil beach

 

 றிஸ்லி சம்சாட்.