கட்சியை நேசிக்கும் எவரும் மஹிந்தவின் பாத யாத்திரையில் இணைந்து கொள்ளமாட்டார்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் எவரும் மஹிந்த ராஜபக்சவின் பாத யாத்திரையில் இணைந்து கொள்ள மாட்டார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நேசிக்கும் எந்தவொரு உறுப்பினரும் மஹிந்த ராஜபக்சவின் பாத யாத்திரையில் இணைந்து கொள்ளக்கூடிய சாத்தியமில்லை.

எதிர்வரும் 28ம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் பாத யாத்திரைக்கு சுதந்திரக் கட்சியின் அனுமதியோ அல்லது ஆதரவோ கிடையாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை, நகரசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் இந்த பாத யாத்திரையில் இணைந்து கொள்ள மாட்டார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது தீர்மானம் எடுக்கும் வேறும் எந்தவொரு கூட்டத்திலோ தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.