காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவர் பர்கான் வானி உள்ளிட்ட 2 பேர் பாதுகாப்பு படையினரால் கடந்த 8–ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீரில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் 49 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பல நாட்களுக்கு பிறகு அங்கு தற்போது அமைதி திரும்பி வருகிறது. காஷ்மீர் கலவரத்திற்கு இந்தியாதான் காராணம் என பாகிஸ்தான் விமர்சனம் செய்து வருகிறது. இது குறித்து ஐ.நா.-விடம் பாகிஸ்தான் முறையிட்டது.
இந்நிலையில் இன்று டெல்லியில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் “ தன்நாட்டு மக்கள் மீது போர் விமானங்களையும், ராணுவத்தையும் ஏவிவிட்ட ஒரு நாட்டுக்கு, வீரமிக்க, ஒழுக்கமான நமது ராணுவ வீரர்கள் பற்றி குறை சொல்ல உரிமை கிடையாது.
பாகிஸ்தான் வெக்கம் இல்லாமல் தீவிரவாத்தை ஊக்குவிப்பதற்கு காரணம், காஷ்மீரை ஒருநாள் சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற நினைப்புதான்.
ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் பாகிஸ்தான் பிரதமருக்கு கூற விரும்புவது ‘காஷ்மீரை சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்ற கனவு’ காலம் முடிவுக்கு வரும் போதும் கூட நிறைவேறாது. பூமியின் சொர்கத்தை ஒருநாளும் தீவிரவாதத்தின் சொர்க்கமாக மாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.