2-வது டெஸ்ட் , தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும் : இன்சமாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இன்சமாம் உல் ஹக் உள்ளார். இவர் தேர்வு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20-ஐ விட டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி தற்போது 110 புள்ளிகளுடன் 3-வது இடத்தி்ல் உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கைப்பற்றினால் இரண்டு அல்லது முதல் இடத்திற்கு வரலாம். ஆனால் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளது. டி20 போட்டிக்கான தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளது.

டெஸ்ட் போட்டி தரவரிசை போல் மற்றதிலும் பாகிஸ்தான் முன்னேற வேண்டும் என்று இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்சமாம் மேலும் கூறுகையில் ‘‘நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம். டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து பின்னோக்கி இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம்.

தொடர்ந்து நாம்முடைய திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த நிலையை எட்ட முடியும். இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்டுகளும், நாங்கள் தொடர்ச்சியான பார்மில் இருக்கிறோம் என்பதை காட்ட சரியான பரிசோதனையாக இருக்கும்.

இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம். ஆனால், எங்களுடைய அணி சிறப்பாக விளையாடி லார்ட்ஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், 2-வது டெஸ்டில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். இந்த தொடரை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இந்த டெஸ்ட் இருக்கும்’’ என்றார்.