ஹஸனலி அவர்களுக்கு தேசியப்பட்டியல் பதவியைக் கொடுக்க ஹகீம் அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதை ஏற்றுக்கொள்ள ஹஸனலி அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் இன்று செய்தித்தாள் கண்ணோட்டத்தில் பார்க்கக் கிடைத்தது.
ஹஸனலி அவர்களை தே.ப வை எடுக்கச் சொல்லி இற்றைக்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இது ஹகீம் அவர்கள் இன்று எடுத்த முடிவு அல்ல.
தேசிய பட்டியலை பாரம் எடுக்கச் செய்வதன் மூலம் பல காரியங்களைச் சாதிக்க ஹகீம் அவர்களின் சாணக்கியம் திட்டமிடுவது தெரிகிறது.
1. ஹஸனலி அவர்களை அமைதிப்படுத்துவது.
2. பஷீர் அவர்களை தனிமைப்படுத்துவது.
3. தே. பட்டியலுக்குத்தான் ஹஸனலி அவர்கள் இத்தனை நாளும் பிரச்சினை படுத்தினார் என்று கொண்டு சென்ற பொய்ப் பிரச்சாரத்தை உண்மைப்படுத்துவது.
4.அட்டாளைச்சேனை மக்களையும் ஏனைய போராளிகளையும் ஹஸனலி அவர்களுக்கு எதிராகத் திருப்புவது.
5. கட்சியில் தனது தலைமைக் கேற்பட்டிருக்கும் சரிவை சரிக்கட்டுவது.
6.கட்சி நீதிமன்றுக்குப் போய், எதிர்வரும் தேர்தலில் மரச்சின்னத்தில் போட்டியிட முடியாமல் போவதைத் தவிர்ப்பது.
7. முஸ்லிம்கள் சார்பாக பேரம் பேசுவதற்கு தான் தகுதியற்றுப் போய்விடவில்லை என்பதை அவசியப்பட்ட தரப்புக்களுக்கு புரியவைப்பது.
8. இதன் மூலம், இவருக்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமல் போய்விடலாம் என்று, தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேரங்களை உயிர்ப்பிப்பது.
9. இவை அனைத்தின் மூலமும் கிழக்கின் எழுச்சியின் வளர்ச்சியையும் இலகுவாக தடுப்பது, போன்றவை சில காரணங்களாகும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு. காவில் யாரு போட்டியிட்டிருந்தாலும் வென்றிருப்பார்கள் என்ற நிலைமை இருந்தது தெரியும். அந்த வகையில் போட்டியிட்டவர்களுக்கு அது நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்ற வகையில் அதுவும் ஒரு தேசிய பட்டியல் போன்றதுதான்.
தேர்தலில் போட்டியிட இருந்த ஹஸனலி அவர்களைத் தடுத்து தேசிய பட்டியலில் வருமாறு ஹகீம் அவர்கள் கூறித் தடுத்திருப்பதால் அந்த மீதமுள்ள தேசிய பட்டியலுக்கு ஹஸனலி அவர்கள் உரிமை கோர முடியும் என்ற போதிலும், மேற்சொன்ன காரணங்களுக்காக அதை எடுக்காமல் தனது குறைக்கப்பட்ட செயலாளரின் அதிகாரங்களை மீளப்பெறுவதில் அவர் குறியாக இருக்க வேண்டும் என்று கிழக்கின் எழுச்சி அபிப்பிராயப்படுகிறது.
தோல்வியடைந்த தலைமைத்துவத்திற்குச் சொந்தக்காரரான ஹகீம் அவர்கள், நேர்மைக்குப் புறம்பான வழியில் செயலாளரின் அதிகாரங்களைக் குறைக்க முயன்று தோற்று, இன்று ஹஸனலி அவர்களின் முன் மண்டியிட்டிருப்பது போல், வட கிழக்கு முஸ்லிம்களை ஆயுள் முழுதும் மண்டியிட்டுக் கிடக்கச் செய்ய திரை மறைவில் சேதாரமில்லாமல் நடக்கும் காரியங்கள் வெற்றியளிக்குமுன் மு.கா தலைமைத்துவத்திலிருந்து விலக்கப்பட வேண்டும்.
எது எவ்வாறாயினும் “மு.கா தலைமை கிழக்கிற்கு வேண்டும்” என்பதில், அது கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்பதையும் உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.
சே.இ. அஸ்ஸுஹூர்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி