கடந்தகால ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயங்கள் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் வகையிலே அமைந்துள்ளன.
ஒரு கட்சிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்காது என்பதனாலே இவ்வாறு எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து இனங்களுக்கும் ஆட்சியில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தற்போது எல்லை நிர்ணயங்கள் திருத்தப்பட்டு வருகின்றன என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
நேற்றுக்காலை கொழும்பிலுள்ள மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, உரிய முறையில் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்பட்டாலே சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சிலர் நான் வேண்டுமென்றே எல்லை நிர்ணயத்தைக் காரணம் காட்டி தேர்தலைப் பிற்போட்டு வருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
தேர்தல் உரியகாலத்தில் நடத்தப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்கள். அது அவர்களது உரிமை.
எல்லை நிர்ணயங்களில் வடகிழக்கில் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. எல்லைநிர்ணய முறைப்பாடுகளை ஆராயும் குழு அடுத்தவாரமளவில் வட, கிழக்கிற்கு விஜயம் செய்து தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
எல்லை நிர்ணயங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதுடன் 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு தெரிவிக்கிறது.
டெங்கு நுளம்பு பெருகும் பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் நிர்மாணிக்கும் பகுதிகளிலே அதிகமாக டெங்கு நுளம்பு பெருகி வருகிறது.
அப்பகுதிகளில் 45% நுளம்பு பெருக்கம் காணப்பட்டால் குறிப்பிட்ட கட்டிட நிர்மாண அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் காலவதியாகி தற்போது ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் நிர்வாகம் நடைபெற்றுவருகிறது.
மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத்தை விட தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் திறமையாக நடைபெற்றுவருகிறன.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உறுதியளித்தபடி எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்பு நடாத்தப்படும். இதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
இணைந்த எதிர்க்கட்சியினர் பாதயாத்திரைகளை மேற்கொள்வதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்திவிட முடியாது என்றார்.