தொழில் கல்வியை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை பாட விதானங்களில் தீர்மானமிக்க மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
அதன்மூலம் தகைமைகளுக்கு ஏற்ப தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தி வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்ப கற்கைநெறியைப் பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது நாட்டில் அமுலிலிருக்கும் கல்வி முறைமைக்கும் தொழில் சந்தைக்குமிடையில் நீண்ட இடைவெளியுள்ளது.
அந்நிலையினைப் போக்கி எதிர்காலத்தில் தொழில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக நீண்ட கால தொழிற்துறை பாடநெறிகளை அறிமுகம் செய்து சகல வசதிகளையும் வழங்கி தொழில் கல்வியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆகவே கல்வியமைச்சு மேற்கொள்ளும் ‘லங்கம பாசல ஹொந்தம பாசல’ செயற்றிட்டத்தின் மூலம் சகல கிராமங்களிலும் பாரியளவிலான அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்காக அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் குளியாப்பிட்டியில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் வொக்ஸ்வகன் தொழில்பட்டறையுடன் தொடர்புடைய மோட்டார் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் நாடு பூராகவும் தொழில் பயிற்சி நிலையங்களை அமைத்து மாணவர்களைப் பயிற்றுவித்து அவர்களின் தகைமைகளுக்கு ஏற்ப தொழில்வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.