இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய இஸ்லாமிய மாநாட்டிற்கு சிங்கப்பூர் அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் லீ ஷியேன் லுங் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தயாரித்து அமுல்ப்படுத்த ஆரம்பித்தவுடன் பொருளாதார, சமூக ரீதியாக பாரிய வெற்றிகளை இருநாடும் பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அந்நாட்டு பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது இஸ்தானா மாளிகையில் சிங்கப்பூர் பிரதமரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
அங்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுங் மேலும் குறிப்பிடுகையில்,
நீண்ட காலமாக இரண்டு நாட்டுக்கும் இடையிலான மிகவும் வலுவான நட்புறவு காணப்படுகின்றது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பிறிமா நிறுவனம் தற்போது இலங்கை நிறுவனம் என்ற அளவிற்கு மக்களுக்கு நெருக்கமாகியுள்ளது.
மேல் மாகாண மெகா பொலிஸ் திட்டம் மற்றும் திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள் சிங்கப்பூர் சுபோனா ஜூரோங் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
மேலும் சுற்றுலா அபிவிருத்தியின் போது சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடான தொடர்பை வலுப்படுத்த முனைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, தென் ஆசியாவின் இஸ்லாமிய விசேட மாநாடு ஒன்றினை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது.
குறித்த மாநாட்டிற்கு நாம் பூரண ஆதரவினை வழங்கவுள்ளோம் என்றும் சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.