புவி வெப்பமடைதல் காரணமாக உலகிலுள்ள உயிரினங்களில் 13 இல் ஒன்று முற்றிலுமாக அழியும் என அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனக்டிக்கட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியல் வல்லுநர் மார்க் அர்பன், புவி வெப்பமடைதலால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 131 ஆய்வுக் கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்தார்.
அந்தப் பகுப்பாய்வின் முடிவில் அவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் புவி வெப்பமடைவதால் உலகிலுள்ள பல்வேறு உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சராசரியாக சுமார் 7.9 சதவீத உயிரினங்கள் அழியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது, 13 உயிரினங்களில் ஒரு உயிரினம் அடியோடு அழியும்.
இந்த விகிதம் வட அமெரிக்காவில் குறைவாகவும் (20 உயிரினங்களுக்கு ஒன்று), ஐரோப்பாவில் அதைவிட மிகக் குறைவாகவும் உள்ளது.
ஆனால், புவி வெப்பமடைதல் காரணமாக தென் அமெரிக்காவில் உயிரினங்கள் அடியோடு அழியும் விகிதம் 23 சதவீதமாக (ஐந்து உயிரினங்களுக்கு ஒன்று) இருக்கும்.
மற்ற எந்தக் கண்டத்தை விடவும், தென் அமெரிக்காவில்தான் புவி வெப்பமடைதல் காரணமாக அதிக விகிதத்தில் உயிரினங்கள் அடியோடு அழியும் என பகுப்பாய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது வளிமண்டலத்தில் கரியமில வாயு கலக்கப்படும் அளவு நீடித்தால், இந்த நூற்றாண்டின் முடிவில் உலகில் இருக்கும் உயிரினங்களில் 6 இல் ஒன்று முற்றிலுமாக அழிந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.