துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில், அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டதால் துருக்கியில் பரபரப்பு காணப்படுகிறது.
தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள அட்டாடர்க் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தினரின் இந்த முயற்சிக்கு அதிபர் டைப்பி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் எல்ட்ரீம், இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி என்றும், அவர்கள் நினைத்தால் மட்டுமே அகற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
டி.வி.சானல் ஒன்றிற்கு பிரதமர் பேட்டியளித்த அவர், ”எனது ஆட்சியை கவிழ்த்து ராணுவம் கைப்பற்ற முயற்சி செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
நன்றி – CNN