ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் தான் அதிக அளிவில் பாதிக்கப்படுகிறார்கள்,
இந்நிலையில், சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள சந்தைப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 300 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்தனர். இஸ்லாமிய பண்டிகை விடுமுறை நாளில் ஷாப்பிங் செய்வதற்காக தனது தாயாருடன் வந்திருந்த ஆசல் அஹமது என்ற 4 வயது சிறுமியும் இதில் படுகாயமடைந்தார்.
வணிக வளாகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தாலும், அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் தீ பரவியதால் இவ்வளவு பேர் உயிரிழக்க நேரிட்டது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் பலர் திரண்டு அப்பகுதியில் அஞ்சலி செலுத்தினர். அப்போது தீக்காயத்தில் கடுமையாக பாதித்த சிறுமி ஆசல், முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்ட நிலையில் தனது தந்தையுடன் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அந்த சிறுமியைப் பார்த்த மற்றவர்கள் கண்கலங்கினர்.
அழகான முகம் தீயில் கருகியதால் பேண்டேஜ் சுற்றிய நிலையில் அஞ்சலி செலுத்த வந்த 4 வயது சிறுமியின் இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு, அகதியாக செல்லும் போது, கடலில் விழுந்து துருக்கி கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய சிரியா நாட்டு சிறுவன் அய்லலின் புகைப்படம் முதல் தற்போது வெளிவந்திருக்கும் இந்த 4 வயது சிறுமியின் புகைப்படம் வரைக்கும் உள்நாட்டு போரால் அவதிப்பட்டு வரும் நாடுகளில் வழும் மக்களின் துயரங்களை இந்த உலகிற்கு தெளிவாக உணர்த்தியும், அவர்களின் வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.