நல்லாட்சிக்கான அரசிற்கு முகாமைத்துவ கணக்காளர் நிறுவனம் அபரிமிதமான பங்களிப்பை நல்கி வருகின்றது

சுஐப் எம்.காசிம்  

 

உலகப் பொருளாதார மந்த நிலையில் இருந்து நாடுகளை மீட்டெடுப்பதற்கு முகாமைத்துவ கணக்கியல்சார்துறை பெரும் பங்களித்து இருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றுமாலை தெரிவித்தார். 

அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கணக்காய்வு மாநாடும், ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குப் பதிவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான விருது வழங்கலும் கொழும்பு, சினமன் லேக்சைட்  ஹோட்டலில் நேற்று இடம்பெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன்,விருதுகளையும் வழங்கிவைத்தார். 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சிங்கப்பூர் தேசிய கணக்கியல் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர், பேராசிரியர் ஹோ யூ கீ, தென்னாபிரிக்க கேப்டவுன் கணக்கியல் பல்கலைக்கழகத் தலைவர், பேராசிரியர் மார்க்கிரகம், அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்கியல் நிறுவகத்தின் உதவித் தலைவர் பசீர் இஸ்மாயில் ஆகியோரும் பங்கேற்றனர்.

அமைச்சர் இங்கு உரையாற்றியபோது கூறியதாவது,

rishad rizhad

முகாமைத்துவ கணக்கியல் தொழில்சார்துறை மற்றும் நல்லாட்சிக்கான அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தூரநோக்கிலான, பொருளாதார அபிவிருத்திக்கும் முகாமைத்துவ கணக்காளர் நிறுவனம் அபரிமிதமான பங்களிப்பை நல்கி வருகின்றது.  

அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்கியல் நிறுவகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரேயே இந்தத் துறையில் நாங்கள் பிரகாசிக்கவும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளுடன் நாம் சமானமாக இருக்கவும் முடிந்தது. அத்துடன் இலங்கையில் உள்ள பட்டயம் மற்றும் முகாமைத்துவ கணக்கியல் நிறுவனங்கள் உயிர்ப்பும் பெற்றன. 

தென்கிழக்காசிய சம்மேளன கணக்கியல் நிறுவகம், சர்வதேச கணக்கியல் சம்மேளனம் ஆகியவற்றிலும், மிக அண்மைக்காலமாக ஆசிய மற்றும் பசுபிக் கணக்காளர் கூட்டுச் சம்மேளனத்திலும் இந்த நிருவகம் அங்கத்துவத்தைப் பெற்று உலகளாவிய அமைப்பாக இது விளங்குவதை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

உலகாளவிய கணக்கியல் துறையில் The Big Fourஎனப்படும் நான்கு பாரிய சர்வதேச நிறுவனங்களின் ஈடுபாடு உங்களுக்குத் தெரியும். இந்த நான்கு பாரிய நிருவனங்களே உலகின் பெரும்பாலான கம்பனிகளில் கணக்காய்வில் ஈடுபட்டு வருகின்றன. உலகப் பொருளாதார மந்தநிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த நிருவனங்கள் மற்றும் ஏனைய கணக்காய்வு நிறுவனங்களின் கிராக்கி அதிகரிக்கப்பட்டதனால் கணக்காளர்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

உலகளாவிய கணக்கியல் சந்தையில் அயர்லாந்து, தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, கானா, கனடா, சைப்ரஸ், ரூமேனியா, பிரேசில், ஆர்ஜென்டீனா, மொரீசியஸ், பிலிபைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளே மனிதவலு சார்ந்த ஆட்சேர்ப்பில் முன்னணி வகிக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கணக்கியல் துறையில் மட்டுமே கணக்காளர்கள் அறிவைப் பெற்றிருப்பது எதிர்காலத்தில் பொருத்தமற்றது என நம்புகின்றேன். அரசாங்க, தனியார் துறைகளில் பணியாற்றும் கணக்காளர்கள் பல்வேறுபட்ட தொழில்நுட்ப அறிவையும், கணக்கியல்சார் கணணி அறிவையும் பெற்றிருக்க வேண்டும். 

ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குப் பதிவியல், முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நன்மைபயக்கக் கூடியதும், நிறுவனங்களின் மூலோபாயத்துக்கும் பயனளிக்கக்கூடியது என நான் கருதுகின்றேன்.  அந்தவகையில் பொதுக்கம்பனிகள், வங்கி, காப்புறுதித்துறை, தனியார் கம்பனிகள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் கணக்குப்பதிவில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு விருது வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டுக்கும் நான் பாராட்டுத் தெரிவிக்கின்றேன்.