விற்று பிழைத்தல்

முகம்மது தம்பி மரைக்கார்
 
 
அரசியல் என்பது கொளுத்த வியாபாரமாகும். அதில் – இலட்சங்களைக் கொட்டினால், கோடிகளை உழைத்துக் கொள்ள முடிகிறது. அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கூட, அச்சமின்றி இலட்சக் கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றனர். வெற்றி பெற்ற பின்னர், ஒரேயொரு வீதி நிர்மாணக் கொந்தராத்தில் – தேர்தல் செலவுகள் அனைத்தையும் இலாபத்துடன் அள்ளிக்கொள்ள முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் காட்டில் இந்தளவு மழை என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் வியாபாரம் எவ்வளவு ஜோராக இருக்கும் என்று சொல்லித் தெரியத் தேவையில்லை. ஆனாலும் சொல்ல வேண்டியுள்ளது.
 
mahinda-rajapaksa-rauff-hakeem_Fotor
 
முஸ்லிம் சமூகம் – தமக்கென்று ஓர் அரசியல் கட்சியாவது இருக்க வேண்டும் என விரும்புகிறது. அந்தக் கட்சியானது, தமக்காகக் குரல் கொடுக்கும் என்று – அந்த சமூகம் அப்பாவித்தனமாக நம்புகிறது. இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் – ஆசைப்பட்டதை விடவும் அதிகமாகவே, அவர்களுக்குள் அரசியல் கட்சிகள் உருவாகி விட்டன. இருந்தபோதும், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை – ஜனநாயக வழியில் போராடிப் பெற்றுக் கொள்வதற்கென்று உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், தமது மக்களின் நலன்களை விற்றுப் பிழைத்து, வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது – கசப்பான உண்மையாகும்.  
 
முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்ற கணிசமான அரசியல் கட்சிகள், தமது பெயர்களில் ‘காங்கிரஸ்’ என்கிற சொல்லை வைத்திருக்கின்றன. அவற்றிலொரு காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும் – அடுத்த நிலைத் தலைவர் அல்லது தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவாகியுள்ளமை குறித்து, வாசகர்கள் அறிவர். இதன் காரணமாக, அந்தக் கட்சியினதும், கட்சித் தலைவருடையதும் கடந்தகால இரகசியச் செயற்பாடுகள் அம்பலமாகி வருகின்றன. குறிப்பாக, மக்கள் நலன் குறித்து சற்றும் யோசியாமல், கட்சியை வைத்து காசு உழைத்த, அவர்களின் அதிர்ச்சியளிக்கும் நயவஞ்சகக் கதைகள்தான் இப்போது பெரும் பேச்சாக உள்ளது.
 
கோடிகள் பற்றிய குற்றச்சாட்டு
 
முஸ்லிம்களின் ‘காங்கிரஸ்’ கட்சிகளில் ஒன்றினுடைய, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் மட்டத்தவர்களுக்கான கூட்டமொன்று அண்மையில் அம்பாறை கரையோரைப் பகுதியில் நடைபெற்றது. அந்த கட்சியின் தலைவர்தான் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இதன்போது, கட்சித் தலைவருடன் முரண்பட்டுள்ள – அடுத்த நிலைத் ‘தலைகள்’ குறித்து அதிகம் பேசப்பட்டது. தலைவரும் தனது கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தார். தலைவருக்கு ஜால்ரா அடிப்பவர்களில் சிலர் – அந்த சந்தர்ப்பத்தை, தமது தலைமைத்துவ விசுவாசத்தினை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத் கொண்டார்கள். தலைவருக்கு எதிரான – அடுத்த நிலைத் ‘தலை’களில் ஒன்றினை, கட்சியை விட்டும் கழற்றி விட வேண்டும் என்று, ஜால்ராக்கள் ஆக்ரோசப்பட்டன. எதுவும் பேசாமல் தலைவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
 
இந்த நிலையில், அந்தக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த உயர் மட்டத்தவர் ஒருவர் எழுந்தார். “அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்துக்கு, நமது கட்சியின் ஆதரவை வழங்குவதற்காக, அப்போதைய ஆட்சியாளர்களிடம் நமது கட்சித் தலைவர் – பணம் பெற்றுக்கொண்டதாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில், அப்போது நமது கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்தோர் உள்ளிட்டவர்களுக்கு, தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கதைகள் உள்ளன. இது குறித்து, கட்சித் தலைவர் தெளிவுபடுத்த வேண்டும்” என்று, குண்டொன்றினைத் தூக்கிப் போட்டார் அந்த நபர்.
 
இதற்கு தலைவர் என்ன பதிலளித்தார் என்று, கூட்டத்தில் கலந்து கொண்ட – கட்சியின் உயர் மட்டத்தவர்கள் சிலரிடம் கேட்டோம். “கட்சிக்காக பணம் வாங்கியது உண்மைதான். மறைந்த தலைவருடைய காலத்திலும் கட்சிக்கு இவ்வாறு காசு கிடைத்திருக்கிறது. ஆனால், கட்சி பெற்றுக் கொண்ட பணத்தினை கட்சிக்காகத்தான் செலவு செய்தேன். நான் ஒரு சதமும் எடுக்கவில்லை என்று கூறி, தலைவர் மழுப்பி விட்டார்” என, மேற்படி உயர் மட்டத்தவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். 
 
இதேவேளை, அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், கட்சி காசு வாங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் பேசியதாகவும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கூறினார்கள்.
 
ஜனநாயகத்துக்கான படுகுழி
 
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் என்றால் என்ன என்பதையும், அதன் பாரதூரத்தினையும் இங்கு மீளவும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. 18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஆபத்தினை மிகச் சரியாக விளங்கிக் கொள்ளும் போதுதான், அதனை ஆதரிப்பதற்கு, காசை வாங்கிக் கொண்டு கைகளை உயர்த்தியதாகக் கூறப்படும் – முஸ்லிம்களின் காங்கிரஸ் கட்சியின் தலைமையானது, இந்த நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்த – மாபெரும் துரோகம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
 
அரசியலமைப்பின் ஏழாவது அத்தியாயமானது ஆட்சித்துறை பற்றியதாகும். இதில், இலங்கைக் குடியரசின் ‘ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தலும், அவரின் பதவிக் காலமும்’ என்கிற விடயத்தினை 31 ஆவது உறுப்புரை விபரிக்கின்றது. குறித்த 31 ஆவது உறுப்புரையின் 2 ஆவது உப பிரிவு பின்வருமாறு கூறுகிறது. ‘சனாதிபதிப் பதவிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளெவரும், அதன் பின்னர் அத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையுடையவராகார்’.
 
இலங்கையின் ஜனாதிபதியாக 2005 ஆம் ஆண்டிலும், பின்னர் 2010 ஆம் ஆண்டிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்பின் மேற்குறிப்பிட்ட உறுப்புரையின் பிராகாரம், இன்னொரு முறை ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் சந்தர்ப்பத்தினைப் பெற முடியாதவராக இருந்தார். ஆயினும், தனது வாழ்நாள் முழுக்கவும் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என்கிற பேராசை – மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருந்தது. எனவே, இரண்டு தடவைக்கும் அதிகமாக, ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாது என்று, அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்பினார். அதனால், மேற்படி ஏற்பாட்டினைத் திருத்தும் வகையிலான, 18 ஆவது திருத்தச் சட்டத்தினை நாடாளுமன்றில் நிறைவேற்றினார். இதற்கிணங்க, நபரொருவர் ஏற்கனவே ஜனாதிபதி பதவியினை இருமுறை வகித்திருந்தாலும் கூட, அதன் பின்னரும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்பதோடு, எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதிப் பதவியை வகிக்க முடியும் என்கிற நிலைமையும் உருவானது. 
 
அரசியலமைப்பின் மேற்படி 18 ஆவது திருத்தமானது, ஜனநாயகத்தினைக் குழிதோண்டிப் புதைக்கும் ஓர் ஏற்பாடு என்று, அரசியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டது. அதிலும், மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவர், இரண்டு தடவைக்கு அதிகமாய் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் நிலையொன்று உருவாவது, இலங்கை முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாக அமைந்து விடும் என்கிற அச்சமும் பரவலாக இருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே, அரசியலைப்பின் 18 ஆவது திருத்தச் சட்ட மூலமானது, நாடாளுமன்றின் அங்கீகாரத்தினைப் பெறுவதற்காக – சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, முஸ்லிம்களின் ‘காங்கிரஸ்’ கட்சிகள் அனைத்தும் அந்தச் சட்ட மூலத்துக்கு – தமது ஆதரவினைத் தெரிவித்தன.
 
காசுக்கு உயர்ந்த கைகள்
 
நபரொருவர் இரண்டு தடவைக்கு மேல், ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் போது, அவர் – சர்வதிகாரப் போக்குடைவராக மாறும் நிலை உருவாகும் என்பது பற்றியும், அதனால் – ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்பது குறித்தும், முஸ்லிம்களின்  ‘காங்கிரஸ்’ கட்சிகள் கவலைப்படவில்லை. மேலும், பொதுபலசேனா போன்ற சிங்களப் பேரினவாத அமைப்புகளைப் போஷித்து வளர்த்துக் கொண்டு, அவற்றினை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக ஏவி விடும் மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவர், இரண்டு தடவைக்கு அதிகமாய் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் நிலை உருவானால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளக் கூடிய பேராபத்துக் குறித்தும், முஸ்லிம்களின் ‘காங்கிரஸ்’ கட்சித் தலைவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
 
இவ்வாறானதொரு நிலையில்தான், அரசியமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, முஸ்லிம்களின் ‘காங்கிரஸ்’ கட்சியொன்றின் தலைமையானது, அப்போதைய ஆட்சியாளர்களிடம் பல கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
இது மட்டுமன்றி, இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் – இவ்வாறு, பல தரப்புக்களிடமிருந்தும் மேற்படி கட்சியின் தலைமையானது, பணம் பெற்றுள்ளதாகவும் கதைகள் வெளியாகியுள்ளன. 
 
சமூகத்தினையும் கட்சியினையும் அடமானம் வைத்து, கட்சியின் தலைவர் இவ்வாறு காசு பெற்றதாகக் கூறப்படும் கதைகளைக் கேள்வியுற்ற – கட்சியின் மேல்மட்டத்தவர்கள் பலரும், தற்போது தலைவருடன் கடுமையான கடுப்பில் உள்ளனர். இந்த நிலையில், கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த – சில முக்கியஸ்தர்கள், கட்சித் தலைவரை நேரடியாகச் சந்தித்து – இது தொடர்பில் விசாரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
 
இதேவேளை, தலைவருடன் முரண்பட்டுள்ள அடுத்த நிலைத் தலைவர்களையும், மேற்படி அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் சந்தித்துள்ளனர். இதன்போது, கட்சியையும் சமூகத்தையும் அடமானம் வைத்து, தலைவர் காசு வாங்கியதாகக் கூறப்படும் கதைகளை, கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். எவ்வாறிருந்தபோதும், 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று, அந்த சந்தர்ப்பத்தில் கட்சித் தலைவரிடம் – தான் மன்றாடியதாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் முஸ்லிம்களின் காங்கிரஸ் கட்சியின் அடுத்த நிலைத் தலைவரொருவர் தன்னைச் சந்தித்தவர்களிடம் கூறியிருக்கின்றார்.
 
ஆக, மேலுள்ள கதைகளையும் குற்றச்சாட்டுக்களையும் எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், மேற்படி ‘காங்கிரஸ்’ கட்சியின் தலைவர் – சமூத்தையும் கட்சியையும் அடமானம் வைத்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் காசு பெற்றுள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
 
இரட்டை முகம்
 
மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தொடர்பில், ஒருபுறம் கடும் அதிருப்திகளை வெளியிட்டு வந்த – மேற்படி காங்கிரஸ் கட்சித் தலைவர், இன்னொருபுறம் – அதே ராஜபக்ஷவிடம் காசு வாங்கிக் கொண்டு, அவரை – ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக வைத்திருக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட, 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஆதரித்தமையானது, மிக அருவருப்பான அரசியல் விபச்சாரமாகும்.
 
எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய முற்பட வேண்டும். ‘நமது சமூகத்துக்குக்காகக் குரல் கொடுக்கும்’ என்கிற நம்பிக்கையில், ஒரு கட்சிக்காக நாம் வாக்களித்து விட்டுக் காத்திருக்கும் போது, அந்தக் கட்சியை அடமானம் வைத்து – காசு உழைக்கிறார்கள் என்கிற கயமைத்தனத்தினை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்.
 
இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் – தாம் அறிந்து கொண்ட அனைத்து விடயங்களையும், மேற்படி கட்சியின் உயர் மட்டத்தவர்கள் பகிரங்கப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். ‘தலைவரைப் பகைத்துக் கொண்டால், அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய் விடும்’ என்பதற்காக, ஒரு சமூகத்துக்கு எதிராய் இழைக்கப்பட்டுவரும் துரோகங்களை மறைத்து விடக்கூடாது. மேற்படி விவகாரங்கள் குறித்து நம்முடன் மனந்திறந்து பேசியவர்கள் அனைவரும், தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பகிரங்கமாகவும் பேசுவதற்கு முன்வர வேண்டும்.
 
இவை அனைத்துக்கும் அப்பால், கட்சித் தலைவருடன் முரண்பட்டுள்ள அடுத்த நிலைத் தலைவர்களும் – இவை குறித்து ஊடகங்களுக்கு வாக்கு மூலம் வழங்குவதற்குத் தயாராக வேண்டும். அடுத்த நிலைத் தலைவர்களும் தவறிழைத்துள்ளார்கள். அவை குறித்தும் பேச வேண்டும். 
 
நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதுதான் – நமக்கான மிகப்பெரும் அவமானமாகும்.
 
நன்றி: தமிழ் மிரர்