கிழக்கின் எழுச்சியின் கோசங்களை ஏற்று ஸ்ரீ.ல.மு.கா தலைவர் விட்டுக்கொடுப்பாரா ?

ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தான் இருமுறை கிழக்கில் தேர்தல் கேட்டு அங்கீகாரம் பெற்றதனால் தானும் கிழக்கான் என்று சொல்லியிருப்பது கிழக்கில் இருந்து தான் ஸ்ரீ.ல.மு.கா தலைமை வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. மாமனிதரின் மறைவை அடுத்து ஏற்பட்ட தலைமத்துவ போராட்டத்தில் அவரின் மனைவியையும் புறம்தள்ளி நம்பிக்கையின் அடிப்படையில்தான் மூத்த போராளிகள் தலைமத்துவ அமானிதத்தை ஹகீமிடம் ஒப்படைத்தனர். மாமனிதரின் ஆழுமையின் வெற்றிடம் கிழக்கு மக்களையும் முஸ்லிம் சமூகத்தையும் வெகுவாக பாதித்துள்ளது என்றால் மிகையாகாது.

 

2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரவூப் ஹக்கீம் (68,627 வாக்கு) மற்றும் பைசால் (20,246 வாக்கு) ஆகியோர் ஸ்ரீ.ல.மு.கா சார்பில் தெரிவுசெய்யப்பட்டனர். பேரியல் (52,223 வாக்கு), பியதிஸ்ச (45,975 வாக்கு), அதாஉல்லா (39,773 வாக்கு) ஆகியோர் ஐ.ம.சு.மு தெரிவுசெய்யப்பட்டனர்.

இத்தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா , தே.கா, தே.ஐ.மு ஆகிய மூன்று அரசியல் கட்சி தலைவர்களையும் அம்பாரை மக்கள் தெரிவு செய்து அஷ்ரப் எனும் ஆழுமைக்கு இம்மூவரும் சமன் அல்ல என்பதையும் நிருபித்துக் காட்டினர். ஹரீஸ் இத்தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா க்கு எதிராக நின்றது மாத்திரமல்லாமல் அதாஉல்லாவை கட்சிக்கெதிராக வளர்த்ததனால் தனிநபர் செல்வாக்கு எடுபடாததால் தோல்வியடைந்தார். இன்று சர்ச்சைக்குரிய யாப்பு மாற்றத்தின் மூலம் ஸ்ரீ.ல.மு.கா வின் நான்காவது பிரதித்தலைவராக உள்வாங்கப்பட்டுள்ளார்.

2008 ம் ஆண்டைய முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முதலாவது முதலமைச்சரை கைப்பற்ற வேண்டும் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் களம் இறங்கியது. தலைவர், தவிசாளர், செயலாளர் தமது பா.உ. பதவிகளை ராஜினமா செய்து விட்டு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் முதன்மை வேட்பாளர்களாக மரத்தில் கேட்காமல் யானையில் நிறுத்தப்பட்டனர்.

அம்பாரையில் ஜ.ம.சு.மு(தே.கா) இல் 3 முஸ்லிம் அங்கத்தவர்களும் ஜ.தே.க(ஸ்ரீ.ல.மு.கா) இல் 3 முஸ்லிம் அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அம்பாரையில் செயலாளர் ஹஸன் அலி அதி கூடிய 56,275 வாக்குகளைப் பெற்றார். மட்டக்களப்பில் ஜ.ம.சு.மு(தே.கா) இல் 3 முஸ்லிம் அங்கத்தவர்களும் ஜ.தே.க(ஸ்ரீ.ல.மு.கா) இல் 2 முஸ்லிம் அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மட்டக்களப்பில் தவிசாளர் பஷீர் அதி கூடிய 23,342 வாக்குகளைப் பெற்றார். திருகோணமலையில் ஜ.ம.சு.மு(தே.கா) இல் 2 முஸ்லிம் அங்கத்தவர்களும் ஜ.தே.க(ஸ்ரீ.ல.மு.கா) இல் 3 முஸ்லிம் அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். திருகோணமலையில் தலைவர் ஹகீம் அதி கூடிய 39,771 வாக்குகளைப் பெற்றார்.

ஸ்ரீ.ல.மு.கா எடுத்த முதலமைச்சர் வியூகம் இங்கும் நிறைவேற்றப்பட வில்லை. இரு தேர்தல்களிலும் ஸ்ரீ.ல.மு.கா க்கு சமமான மாற்றுப்பலம் உருவானது அக்கட்ச்சியின் பிழையான தேர்தல் கால வியூகத்தை எடுத்துக்காட்டுகிறது. கட்சியின் அடிப்படை கோட்பாடான கல்முனை கரையோர மாவட்டம் தென்கிழக்கு அலகு என்பன தேர்தலின் பின் வழமை போல் தொடர்ந்து முன்னெடுக்கப்படாது பெட்டியில் போட்டு மூடிவைக்கப்பட்டன.

உறுதியான கொள்கை பின்பற்றப்படாமையே ஸ்ரீ.ல.மு.கா வின் தொடச்சியான சரிவுக்குக் காரணமாகும். 2012 ம் ஆண்டின் மாகாண சபை தேர்தலில் செயலாளர் ஹஸன் அலியின் விடாமுயற்ச்சியால் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டதன் காரனமாக ஸ்ரீ.ல.மு.கா தனது முதலமைச்சர் கனவை நனவாக்கிக் கொண்டது.

சாணக்கியத் தலைமை என தன்னைத்தானே புகழ்பாடிக் கொள்ளும் ஸ்ரீ.ல.மு.கா வின் நிகழ்கால தலைமை தன்னையே பணயக்கைதியாக வைத்து போட்டியிட்ட இரு தேர்தல்களிலும் தனது இலக்கை அடையத் தவறியமையானது அவரின் தலைமத்துவ தகுதியை கேள்விக்குள்ளாக்குகிறது.
20 வருடத்தின் பின் முதன்முறையாக ஸ்ரீ.ல.மு.கா தனது வடக்கு மற்றும் திருகோணமலை ஆசனங்களை இழந்தது முதல், கட்சியில் திறைமறைவுச் சதிகளால் ஏற்படுதத்தப்படும் அங்கீகாரமற்ற அவசர யாப்பு மாற்றங்கள் (3.1), (3.3எ,பி,சி), (7.3), (8.3சி), (8.9கே), (9டி), (11பி) தமது தலைமத்துவத்தில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை எடுத்துக்காட்டுகிறது. கிழக்கின் எழுச்சியின் கோசங்களை ஏற்று ஸ்ரீ.ல.மு.கா தலைவர் விட்டுக்கொடுப்பாரா அல்லது மீண்டும் கிழக்கில் போட்டியிட்டு கிழக்கான் என்பதை நிரூபிப்பாரா?

 

கிழக்கின் எழுச்சி
தலைமச்சபை