விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஸ்டெபிகிராபின் சாதனையை சமன் செய்தார். நம்பர் ஒன் வீராங்கனையான அவர் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை கெர்பரை வீழ்த்தினார்.
34 வயதான செரீனா கைப்பற்றிய 22-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களில் 2-வது இடத்தில் இருந்த ஸ்டெபிகிராப் (ஜெர்மனி) சாதனையை அவர் சமன் செய்தார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்க்கரெட் கோர்ட் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக செரீனா, ஸ்டெபிகிராப் உள்ளனர்.
டென்னிஸ் உலகில் முடிசூடா ராணிகளாக திகழும் இருவருமே 175 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர்கள். ஸ்டெபி கிராப் 1987-ம் ஆண்டு தனது முதல் கிராண்ட்சிலாமான பிரெஞ்சு ஒபன் பட்டத்தை வென்றார். அப்போது அவருக்கு 17 வயது 357 நாள் ஆகும். 1988-ம் ஆண்டு அவர் 4 கிராண்ட்சிலாமை வென்றார். கடைசியாக 1999-ல் பிரெஞ்சு ஒபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.
1982-ல் அவர் டென்னிஸ் உலகுக்கு அறிமுகம் ஆனார். 1999-ல் ஒய்வு பெற்றார். ஸ்டெபிகிராப் விளையாடிய காலக்கட்டத்தில் அவருக்கு மார்ட்டினா நவரத்திலோவா, சபாடினி, சான்செஸ் விகாரியோ, மோனிகா செலஸ் சவாலாக இருந்தனர்.
செரீனா வில்லியம்ஸ் 1999-ம் ஆண்டு முதல் கிராண்ட்சிலாமான அமெரிக்கா ஓபன் பட்டத்தை வென்றார். அப்போது அவருக்கு 18 வயதாகும். 2003-ம் ஆண்டில் 3 கிராண்ட்சிலாமை வென்றார். அதற்கு பிறகு 2015-ல் இதே மாதிரி 3 கிராண்ட்சிலாமையும் வென்றார். ஸ்டெபி கிராப், மார்ட்டினா ஹிங்கிசுக்கு பிறகு செரீனாவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அவருக்கு லின்ட்சே தேவன் போர்ட், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், கிம்கிலிஸ்டஸ், ஹெனின் தற்போது முகுருஜா, கெர்பர் சவாலாக விளங்கினார்கள்.
ஸ்டெபிகிராபும், செரீனாவும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதினார்கள். 1999-ம் ஆண்டு நடந்த இந்த போட்டியில் இருவரும் தலா ஒரு தடவை வெற்றி பெற்றனர். ஸ்டெபி கிராப் 377 வாரங்கள் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார். செரீனா தற்போது 300 வாரங்களாக நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்கிறார்.