வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கின் பீஸ் டி.வி. சேனலுக்கு தடை

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.

ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மெக்கா நகருக்கு சென்றுள்ள ஜாகிர் நாயக் விரைவில் மும்பை திரும்புவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் பிரச்சாரங்களை ஒளிபரப்பி வரும் அவருக்கு சொந்தமான ‘பீஸ் டி.வி’ சேனலுக்கு வங்காளதேசம் அரசு இன்று தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி உள்நாட்டில் யாராவது அந்த சேனலை ஒளிபரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.