சாய்ந்தமருத்துக்கான தனியான நகர சபையை மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொடுக்குமா ?

????????????????????????????????????

சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை ஏற்படுத்துவது தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய குழு முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என அக்கட்சியின் பிரதி தலைவரும் அரச வர்த்தககூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

ரமழான் நோன்பு நிறைவுக்குள் சாய்ந்தமருது நகர சபை ஏற்படுத்தப்படா விட்டால் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படும் என அவரினால் ஏற்கனவே வெளியிடபட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை பிரகடனம் செய்யும் விவகாரம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவதானது எமது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாக்குகளை சுருட்டிக் கொள்வதற்காக இதனைப் பொறுப்பேற்ற அரசியல் தலைமைகளே இப்போது இதற்கு முட்டுக்கட்டைகளை போட்டிருக்கின்றனர்.

சாய்ந்தமருது நகர சபை தொடர்பாக எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீனும் நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்தபோது இந்த முட்டுக்கட்டை பற்றி எம்மிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் மக்களை அணி திரட்டி சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு யோசணையை எமது மத்திய குழுவிடம் நான் முன்வைத்திருந்தேன். அதில் நான் உறுதியாகவும் இருக்கின்றேன்.

எனினும், அதற்கு முன்னதாக இறுதியாக ஒரு தடவை அரச உயர் மட்டத்தினரை நேரடியாக சந்தித்து இந்த கோரிக்கை தொடர்பில் பேசுவதே நல்லது என ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே சத்தியாக்கிரகப் போராட்டம் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் அடுத்த வாரமளவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய குழு முக்கியஸ்தர்கள், அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து பேசுவதற்கு நான் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளேன். அதனைத்

தொடர்ந்து அரச உயர்மட்டத்தினரை சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். அதன்போது சாய்ந்தமருது நகர சபையை பிரகடனம் செய்வதற்கு ஒரு காலக்கெடுவை விதிப்போம். அக்காலப் பகுதிக்குள் அது நிறைவேற்றப்படா விட்டால் நிச்சயம் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

அதற்கான ஒழுங்குகள் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. எமது கட்சிப் போராளிகள் அதற்கு தயார் நிலையில் இருக்கின்றனர். பொது மக்களும் எம்முடன் அணி திரள்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதேவேளை சாய்ந்தமருது நகர சபையை ஏற்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே நான் கிழக்கு மாகாண சபையில் கவனஈர்ப்பு பிரேரணை ஒன்றை கொண்டு சென்று நிறைவேற்றியது போன்று நாடாளுமன்றத்திலும் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஊடாக ஒரு கவனஈர்ப்பு பிரேணையை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.