அமெரிக்காவின் லூசியானா மற்றும் மின்னெசோட்டா மாநிலங்களில் அடுத்தடுத்து போலீசாரின் தேவையற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், இங்குள்ள டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நேற்றிரவு நூற்றுக்கணக்கான கருப்பினத்தவர்கள் போலீசாரின் மனித உரிமை மீறல் மற்றும் அராஜகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, ஸ்னைப்பர்கள் (மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுபவர்கள்) சிலர் போலீசாரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில், 5 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆறு போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.
இந்த திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே போலந்து நாட்டின் வார்சா நகரில் நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், இந்த தாக்குதல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனமும் கவலையும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
இந்த தாக்குதல் போலீஸ் அதிகாரிகள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் போன்று தெரிகிறது. இதனால் அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்களையோ சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதான வன்முறையையோ நியாயப்படுத்த முடியாது.
டல்லாஸ் மேயர் மைக் ராலிங்சை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்ததுடன், பலியான அதிகாரிகளின் குடும்பங்களுக்கு எனது ஆதரவையும் இரங்களையும் தெரிவித்தேன். துப்பாக்கி சூடு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.