இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடுவேன் : வார்னர் நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் பீல்டிங் செய்யும்போது அவரது இடதுகை ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த தொடரில் இருந்து விலகினார். தற்போது முறிந்துபோன கைவிரலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி ஜூலை மாதம் 26-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா விளையாட இருக்கிறது. இந்த இரண்டு டெஸ்ட் பயிற்சி ஆட்டத்திலும் வார்னர் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால், முதல் போட்டியில் வார்னர் பங்கேற்பார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே நம்பிக்கையை வார்னரும் தெரிவித்துள்ளார்.

வார்னர் தனது இலங்கை சுற்றுப்பயணம் குறித்து கூறுகையில் ‘‘இலங்கை தொடருக்கு முன் நான் குணமடைவேன். மீண்டும் பேட்டை பிடித்து என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். சில நேரங்களில் வலைப்பயிற்சியில் ஈடுபடாமல் போகலாம். ஆனால், கொஞ்சம் வலைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என எப்போதும் விரும்புவீர்கள். நான் கடந்த காலத்தில் கூறியது போல் ‘குறைவே நிறைவு’ என்பதுதான் என் கருத்து. நான் பெரும்பாலான தொடருக்கு புதிதாகத்தான் தயார் ஆகுவேன். எந்தவொரு போட்டிக்கு தயாராகும்போதும் நான் அதிக நேரம் நின்று விளையாடியது கிடையாது. நான் களத்தில் இறங்கி, 20 நிமிடம் அல்லது கொஞ்சம் அதிகம்தான் பேட்டிங் செய்வேன்.

அணியில் இறங்கும்போது பீல்டிங் பற்றிதான் எனக்கு கவலை. நான் ஸ்லிப் பகுதியில்தான் பீல்டிங் செய்வேன். அப்போது கைக்கு நேராக வரும் பந்தை சரியாக கையில் அமையும்படி பிடிக்க முயற்சி செய்வேன்’’ என்றார்.

பயிற்சியாளர் லீமென் கூறுகையில் ‘‘வார்னர் இரண்டு நாள் போட்டியில் விளையாட மாட்டார். ஆனால் முதல் டெஸ்டிற்கு முன் நடைபெறும் முதல் தர போட்டியில் விளையாடுவார். அப்படி அவர் இடம்பெறாவிட்டாலும் நாங்கள் அதுபற்றி கவலையடைய மாட்டோம். முதல் டெஸ்டிற்கு களம் இறங்குவார்’’ என்றார்.