இணைந்த வட,கிழக்கில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தினையே மக்கள் கோருகின்றனர்

இணைந்த வடக்குக் கிழக்கில்  சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தினையே வடக்கு மாகாண மக்கள்  கோரி நிற்கின்றனர்.
இவ்வாறு முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் சார்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற் குழுவின் முன் பிரசன்னமாகியிருந்த கல்வி அமைச்சர் த. குருகுலராஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோரினால் வலியுறுத்தப்பட்டது.

முதலமைச்சரின் சுகவீனம் காரணமாக அவரின் சார்பில் கல்வி அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் அக்குழு முன் ஆயராகி மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான முன்மொழிவு தொடர்பான வாய்மூல விளக்கம் கொடுத்திருந்தனர்.

கடந்தகால கசப்பான அரசியல் தொடர்பாக, 13வது திருத்தச் சட்டத்தின் அனுபவங்கள் என்பவற்றின் அடிப்படையிலும் மற்றும் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்பதற்காக ஓர் இனம் மற்றைய இனத்தை ஆதிக்கம் செலுத்தவோ, கீழ்ப்படிய வைக்கவோ முடியாத வகையில் அரசியலமைப்பு மாற்றம் அமைய வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டே மாகாண சபையின் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் அக் கமிற்றிக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இறைமை பகிரப்பட்ட, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலான  சமஸ்டி முறையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யுமென்றும் எடுத்துக் கூறப்பட்டது.

அத்துடன் இணைந்த வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் கரிசனைகளை உள்ளடக்கியதான ஓர் தீர்வினையே தாம் பரிந்துரைப்பதாகவும் எடுத்துக்கூறப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் இரு சிங்கள உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய 36 உறுப்பினர்களாலும் இம் முன்மொழிவு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதெனவும் அக்கமிற்றிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே வடக்கு மாகாண மக்களின் ஏகோபித்த கருத்தை அரசு கருத்திலெடுத்து உறுதியான புதிய அரசியலமைப்பு மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.

த.குருகுலராஜா                                      
அமைச்சர்,                                
கல்வி,  பண்பாட்டலுவல்கள்,                            
விளையாட்டுத்துறை, இளைஞர்     
விவகார அமைச்சு, 
வடக்கு மாகாண சபை.

 

சி.தவராசா  

எதிர்க்கட்சித் தலைவர்,

வடக்கு மாகாண சபை: