வெளிவிவகார அமைச்சர் அரசியல் சாசனத்தினை மீறிச் செயற்படுவதாக குற்றச்சாட்டு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டு வருவதாக தி க்ளோபல் ஸ்ரீலங்கா போரம் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டின் நலனுக்கு விரோதமான முறையில் மங்கள சமரவீர சில சர்வதேச தரப்புக்களுடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு நம்பகத்தன்மை அற்றது என்பதனை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்புக் கொள்ளும் வகையில் மங்கள சமரவீர செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என மங்கள ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் உள்ளிட்ட தரப்புக்கள் இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை, பரிந்துரைகள் மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மங்கள சமரவீர பயன்படுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சர் சமரவீர எவ்வித பதிலையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.