வங்காளதேச தொடரை பொதுவான இடத்தில் நடத்தினால் வசதியாக இருக்கும் – மோர்கன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வங்காளதேசம் சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் டாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வங்காளதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவிக்கையில்,

‘பாதுகாப்பு மிகப்பெரிய விஷயம். வங்காளதேச தொடரை பொதுவான இடத்தில் நடத்தினால் வசதியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க முடியும்’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கருத்து கூறுகையில், ‘இது எதிர்பாராமல் நடந்த சம்பவமாகும். இங்கிலாந்து அணி வருவதற்கு இன்னும் 3 மாதம் உள்ளது. அதற்குள் நிலைமை சீரடைந்து விடும். இங்கிலாந்து அணி திட்டமிட்டப்படி வங்காளதேசம் வரும் என்று நம்புகிறேன்’ என்றார்.