மஹியங்கனை பிரதேசத்தில் பௌத்த கொடி எரிக்கப்பட்ட பின்னணியில் மஹிங்கனையில் ஞானசார தேரர் கூறிய கருத்துகள் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது தொடர்பில் ஞானசாரர் அல்லாஹ்வையும் நபியையும் தொடர்புபடுத்தி கூறிய கருத்துக்கள் முஸ்லீம்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதியிந்தது.
அதனை தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஊடக மாநாடு ஒன்றை நடத்தி இது தொடர்பில் கருத்து கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஞானசார தேரர் அசாத் சாலியை விவாதத்துக்கு அழைத்துள்ள நிலையில் அசாத் சாலியும் அவருடன் விவாதம் செய்ய தயார் என கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் தேரர்களுடன் விவாதிப்பது கத்தியில் நடப்பதை போன்ற செயலாகும்.
இலங்கை வரலாற்றில் அரசியல் வாதிகள் பௌத்த தேரர்களுடன் விவாதம் செய்வது மிக அரிதாகவே நடந்துள்ளது.மறைந்த தலைவர் அஷ்ரப் அமைச்சர் ரிசாத் ஆகியோர் தேரர்களுடன் நேரடி விவாதம் செய்தமையை நாம் இவற்றுள் குறிப்பிட்டு கூறலாம். அவர்கள் இருவருமே தேரர்களுடன்கண்ணியமான முறையில் கருத்துக்களை முன்வைத்து ஒரு வரம்புக்குள் கருதுக்களை கூறி சிங்கள மக்களும் பாராட்டும் அளவுக்கு நடந்துகொண்டார்கள்.
ஆனால் ஆக்ரோஷமான பேச்சுக்கு பெயர்போன அசாத் சாலியிடமோ ஞானசாரரிடமோ பொறுப்பான விவாதம் ஒன்றை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.இவர்களுக்கு இடையே ஒரு விவாதம் இடம்பெற்றால் அது தற்போது சமூகத்தில் உள்ள பிணக்குகளை அதிகரிக்க செய்யுமே தவிர இனங்களுக்கு இடையே உள்ள நல்லுறவை ஒரு போது வளர்க்கவோ புரிந்துணர்வை அதிகரிக்கச்செய்யவோ போவதில்லை.
ஞானசார தேரர் ஒரு பௌத்த மதகுரு அசாத் சாலி ஒரு அரசியல்வாதி ஒரு மதகுருவுடன் சமூகபிரச்சினை தொடர்பில் விவாதம் செய்ய பெருத்தமானவர் ஓரளவுக்கு மார்க்கம் தெரிந்து அதை நடைமுறை வாழ்க்கையில் செயற்படுத்துபராக இருப்பதே சிறந்தது.இஸ்லாம் தொடர்பில் போதிய அறிவும் தெளிவும் இல்லாத அசாத் சாலியால் இஸ்லாம் தொடர்பில் எதுவித தெளிவினையும் ஞானசார தேரருக்கு வழங்கிவிட முடியாது.
இதில் மிக மிக ஆபத்தான விடயம் அசாத் சாலியின் வாயில் பிரேக் இல்லை என்பதும் அவர் எப்போதும் கருத்தை சொல்வதை விட விமர்சனம் செய்தே வாதம் புரிவதுமாகும்.இவர்களுக்கு இடையே விவாதம் இடம்பெற்று அசாத் சாலி ஞானசார தேரருக்கு எதிராக எதாவது கூறப்போய் அது மாபெரும் சமூக பிரச்சினையாக உருவெடுத்துவிடும் வாய்ப்பும் அதிகமாக உள்ளதென்பதாகும்.
மேலும் மஹிந்த ஆட்சி காலத்தில் பள்ளிவாயல்களுக்கு கல் அடிக்கப்பட்ட போது வானத்துக்கு பூமிக்கும் குதித்த அசாத் சாலி நல்லாட்சியில் பல முஸ்லீம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்ற போது வாய் திறக்கவில்லை அசாத் சாலியின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது அவர் இழந்துள்ள அரசியல் பிரபலத்தை மீண்டும் அடைந்துகொள்ளவே இந்த விடயத்தில் அவர் திடீரென மூக்கை முழைக்கிறார் என்றே நாம் கருதவேண்டியுள்ளது.
இந்த விடயத்தில் ஆசாத் சாலி தேரருடன் விவாதிப்பதை விட்டு விட்டு ஊடக மாநாடு நடத்தி விளம்பரம் தேடுவதை நிறுத்திவிட்டு அவர் மிக நெருக்கமாக இருக்கும் ஜனாதிபதியிடம் இந்த விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுப்பது பயனுடயதாக இருக்கும்.
எது எப்படியோ மொத்தத்தில் ஞானசார தேரர் – அசாத் சாலி விவாதம் ஒரு சிங்கள குழப்பவாதிக்கும் ஒரு முஸ்லீம் குழப்பவாதிக்கும் இடையேயான ஒரு விவாதமாக மாத்திரமே இருக்கமுடியும்.
கே எல் ஏ சித்தீக்
தலைவர்
மத்திய மாகாண முஸ்லிம் கவுன்சில்