இஸ்லாமிய சிறந்த முன்மாதிரிகளினால் தான் நாம் மற்றையவரை வென்றெடுக்க முடியும் – அதாஉல்லா

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

 

ஜே .எம் .வஸீர்
அல்லாஹூத்தஆலாவின் அருள் நிறையவே கிடைக்கப்பெறுவதுவும், பாவமன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமான மாதம் ரமழான் மாதமாகும். இதனால் கடந்து சென்ற மாதத்தில் இந்நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதுவும் செறிந்து வாழும் முஸ்லிம் உடன்பிறப்புகள் நோன்பு நோற்று இராப்பகலாக நின்று வணங்கி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடியும் அல்லாஹ்வின் அருளை வேண்டியும் செயற்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

 
மேலும் அம்மக்கள் நாளை  தினம் ஈதுல்பித்ர் ஈகைத்திருநாளைக் கொண்டாடி அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்கின்றனர். அம்மக்களுக்காய் எனது உளம் கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மனநிறைவும் மட்டில்லா மகிழ்ச்சியும் அடைகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ்வையும் புகழ்கின்றேன்.

 
பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கும் ஏனைய இன மக்கள் முஸ்லிம்களைப் புரிந்து கொண்டும் மேலும் அவர்களோடும் நல்லுறவு ஏற்படவும் பிரார்த்திப்பதோடு இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முனையும் தீய சக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனை இந்நன்நாளில் பிரார்த்திப்போமாக. ஆமீன்.
முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தின் விரோத சக்திகளால் திட்டமிட்ட பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையிலும் நமது முஸ்லிம் உம்மத்துகள் இன்றைய தினத்திற்கு முகம் கொடுக்கின்றனர். அவர்கள் வாழ்விலும் நிலையான விடிவு ஏற்பட புனிதமிக்க இந்நன்நாளில் நாம் அனைவரும் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக.

 

 

நோன்பு நோற்று நிறைவான தியாகங்களின் பின் வந்திருக்கும் நோன்புப் பெருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அதில் இந்துக்களும், பௌத்தர்களும் இணைந்திருப்பதை விரும்புவோம். இஸ்லாமிய சிறந்த முன்மாதிரிகளினால் தான் நாம் மற்றையவரை வென்றெடுக்க முடியும். அழகிய இலங்கைத் திருநாட்டில் அன்புரவாழ இப்பெருநாள் வழிகாட்டட்டும்.
ஏ.எல்.எம். அதாஉல்லா
தலைவர் – தேசிய காங்கிரஸ்