வற் வரியில் திருத்தம் செய்வது குறித்த ஜனாதிபதி தலைமையிலான நேற்றைய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
வற் வரியில் மக்களுக்கு பாதகமான விடயங்களை நீக்கி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று விசேட சந்திப்பு நடத்தப்பட்டது.எனினும், இந்த சந்திப்பின் போது வற் வரி திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
மாறாக, வற் வரி திருத்தம் தொடர்பில் பொருளியல் நிபுணர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கோரி அதன் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய பேச்சுவார்த்தையில் வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறு வற் வரி தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்தாலோசனை செய்து அதன் அடிப்படையில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதற்காக எதிர்காலத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
வற் வரி அறவீட்டு முறைமை பற்றி போதியளவு தெளிவு கிடையாது என வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது வரி அறவீட்டு முறைமை குறித்து நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இதேவேளை, வற் வரி பிரச்சினைக்கு வெகு விரைவில் தீர்வு காணப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வற் வரி தொடர்பிலான பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
வற் வரி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஏற்கனவே உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.