பழி வாங்குதல்கள் மற்றும் குரோதத்தை நிறுத்தினால் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல

 பழிவாங்கல்களை நிறுத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பழி வாங்குதல்கள் மற்றும் குரோதத்தை நிறுத்திக் கொண்டால் சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமான காரியமாகாது. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு மக்கள் இருக்கும் பக்கம் வந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும். 

ஜனாதிபதி தேர்தலின் போது 58 லட்சம் பொதுத் தேர்தலின் போது 48 லட்சம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்கள் வாக்களித்துள்ளனர். 

அன்று போர் முடிவுறுத்தப்பட்ட போது மக்கள் மகிழ்ச்சியில் வீதியில் இறங்கினார்கள்.கடைகளை மூடி வர்த்தகர்கள் வீதியில் இறங்கினார்கள். 

மஹிந்த ராஜபக்ச அன்று போரை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் நிறுத்திக் கொள்ளாது அபிவிருத்தியையும் ஏற்படுத்தியிருந்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்பொழுதும் முற்போக்கு மக்கள் சமூகத்துடனேயே இணைந்திருக்க வேண்டும். இன்று நாம் முற்போக்கான சமூகத்துடனேயே இருக்கின்றோம். 

எனவே சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பழி வாங்கும் எண்ணங்களை கைவிட்டு குரோத உணர்வுகளை புறந்தள்ளி முற்போக்கு சமூகத்துடன் இணைந்து கொண்டால் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.