ஜனநாயகம் மற்றும் இணக்கப்பாட்டை மதித்து, அனைவருக்கு செவிகொடுக்கும் ஜனாதிபதி தான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் நடந்து கொண்டது போல் செயற்பட தயாரில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தாமரை தடாகம் அரங்கில் இன்று நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வாதிகார ஆட்சியை மக்கள் நிராகரித்ததன் பிரதிபலனாக தான் ஜனாதிபதி பதவிக்கு வந்ததாகவும் அனைவரது கருத்துக்களுக்கு செவி கொடுத்து, நாட்டின் தேவைக்கு அமைய முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மக்கள் மீது சுமையை ஏற்ற அரசாங்கம் எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாரில்லை.
பெறுமதி சேர் வரியால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தருவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.